பெருமாள் தரிசனம்!
திருவாரூர் அருகே உள்ள திருத்தலம் திருக்கண்ணமங்கை. இங்கே அருள்புரியும் பக்தவத்சலப் பெருமாள் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். சுமார் 16.5 அடி உயரம் கொண்ட இவர், தமிழ்நாட்டிலேயே மிக உயரமான பெருமாளாகத் திகழ்கிறார். இங்கு அருள்புரியும் தாயாரின் திருநாமம் அபிஷேகவல்லி. இந்தத் திருத்தலம் வந்து வழிபட்டு, ஓர் இரவு இங்கே தங்கினால் மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம். காஞ்சிபுரத்தில் கோயில் கொண்டு அஷ்டபுஜப் பெருமாளை தேவர்கள் வழிபடுவதாக ஐதீகம். 108 வைணவ திவ்ய தேசங்களுள் ஒன்றான இங்கே மட்டும்தான் பெருமாள் 8 திருக்கரங்களுடன் காட்சிதருகிறார். இதனாலேயே இவருக்கு அட்டபுயகரத்தான் என்ற பெயரும் உண்டு. சீர்காழி அருகே உள்ள திருத்தலம் தலைச்சங்காடு. இங்கே அருளும் பெருமாளின் திருமுக ஒளி, நிலவின் ஒளியைப் போன்று காணப்படுவது குறிப்பிடத்தக்கது. மேலும், சந்திரன் வழிபட்ட திருத்தலம் இது என்பதால், சந்திரதோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட, அந்த தோஷம் நீங்கும் என்கிறார்கள். கேரள மாநிலத்தில் அமைந்துள்ள திருத்தலம் திருவித்துவக்கோடு. இதை, பஞ்சபாண்டவர்கள் க்ஷேத்திரம் என்று அழைக்கிறார்கள். ஒருமுறை அம்பரீசன், பரம்பொருளை நான்குபுறங்களிலும் நான்கு வடிவங்களுடன் வியூக அவதாரமாக தரிசனம் தர வேண்டும் என்று வேண்டினான். அதன்படி, பெருமாள் நான்கு வடிவங்களுடன் இந்தத் தலத்தில் எழுந்தருளியிருக்கிறார். இந்த நான்கு பெருமாள்களையும் தருமன், பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதவன் ஆகியோர் வழிபட்டுள்ளனர்.