உறையூர் நாச்சியார் கோவிலில் தெப்பத்திருவிழா
திருச்சி: உறையூர் நாச்சியார் கோவிலில் நாளை, தெப்போற்சவம் நடக்கிறது. ஸ்ரீரங்கம், ரங்கநாதர் கோவிலின் சார்பு கோவிலான உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவில், தெப்பத்திருவிழா துவங்கியது. வரும், 16ம் தேதி வரை, ஏழு நாட்கள் நடக்கிறது. இன்று வரை, தினமும் தாயார் மூலஸ்தானத்தில் இருந்து மாலை, 6 மணிக்கு புறப்பட்டு, தெப்ப மண்டபத்திற்கு மாலை, 6.15 மணிக்கு வருகிறார். அங்கு, ஆஸ்தான மண்டபத்தில் இருந்தவாறு இரவு, 7.15 மணி முதல், 7.45 மணி வரை பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பின், ஆஸ்தான மண்டபத்தில் இருந்து இரவு, 8 மணிக்கு புறப்பட்டு மூலஸ்தானம் சென்றடைகிறார். விழாவின் முக்கிய நிகழ்வான தெப்போற்சவம் நாளை, இரவு, 7 மணிக்கு நடக்கிறது. இரவு, 8.15 மணிக்கு, ஆஸ்தான தெப்ப மண்டபத்தில் இருந்து, பல்லக்கில் புறப்பட்டு, திருவீதி வலம் வருகிறார். பின், 10.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். நிறைவு நாளான, 16ம் தேதி பந்தக்காட்சி நடக்கிறது.