உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஈரோடு பெரியமாரியம்மன் கோவிலில் இன்று தேர்த்திருவிழா!

ஈரோடு பெரியமாரியம்மன் கோவிலில் இன்று தேர்த்திருவிழா!

ஈரோடு : ஈரோடு பெரியமாரியம்மன் கோவில் உட்பட முப்பெரும் மாரியம்மன் கோவிலில் இன்று, தேர் வடம் பிடித்தலும், மலர் பல்லக்கில் திருவீதியுலாவும் நடக்கிறது. தமிழகத்தில் புகழ்மிக்க கிராம தெய்வம் மாரியம்மன். அனைத்து சமூகத்தினராலும் வழிபடக்கூடிய தெய்வமான மாரி என்பதற்கு, மழை என்றும், குளிர்ச்சி என்றும் பொருள். இதனால், மாரியம்மனை குளிர்ச்சி தரும் தெய்வம் எனலாம். வெப்பத்தால் நாட்டில் ஏற்படும் வறட்சிக்குப்பின் மழையை தந்து, மீண்டும் செழிக்க செய்யும் தெய்வம் மாரியம்மன் என மக்கள் நம்புகின்றனர்.இந்த வரிசையில், ஈரோட்டில், முப்பெரும் கோவில்களால், பெரியமாரியம்மன் கோவில், சின்னமாரியம்மன் கோவில், வாய்க்கால் மாரியம்மன் கோவில் என மூன்று மாரியம்மன் கோவில்கள் சிறப்புற்றுள்ளது.பெரும்பாலான அம்மன் கோவில்கள் வடக்கு முகமாக இருக்கும். இங்கு பெரியமாரியம்மன் கோவில் மட்டும் வடக்கு முகமாகவும், மற்ற இரு கோவில்களும் கிழக்கு நோக்கியும் உள்ளது.மாநகரின் பிரப் ரோட்டில், மாநகராட்சிக்கு எதிரே பெரிய மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. அங்கு மாரியம்மன், ரேணுகாதேவியின் (மாரியம்மன்) மகனான பரசுராமனும், பெண் அடியார் சிலையும் உள்ளது. பெரியமாரியம்மனை பிள்ளை வரம் தரும் அம்மன் என்பர். மகப்பேறு வேண்டுவோர், 45 வெள்ளிக்கிழமைகளில் கோவிலுக்கு வந்து வணங்கி, மகப்பேறு அடைகின்றனர். நோய் வந்தோருக்கு விரைவில் சுகம் அளிக்கிறார். இக்கோவிலில் மூன்று கால பூசைகள் நடக்கிறது.

இக்கோவிலுடன் இணைந்த சின்னமாரியம்மன் கோவில், பெரியார் வீதியிலும், இவ்விரு கோவிலுக்கும் இடையே வாய்க்கால் மாரியம்மன் கோவில் உள்ளதால், இதை நடுமாரியம்மன் கோவில் என்றும் அழைப்பர்.இக்கோவில்களில் பங்குனி குண்டம் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இவ்விழா, இம்மூன்று கோவில்களையும் இணைத்து நடப்பதால், ஊரே கோலாகலமாக திகழ்கிறது.இந்தாண்டுக்கான பங்குனி குண்டம் திருவிழா, மார்ச், 17ம் தேதி இரவு, 9 மணிக்கு பூச்சாட்டுதலுடன் துவங்கியது. 21ம் தேதி கம்பம் நடுதலும், 26ம் தேதி கொடியேற்றமும், 31ம் தேதி அதிகாலை காரைவாய்க்கால் மாரியம்மன் கோவிலில் குண்டம் இறங்குதலும், இரவு, 9 மணிக்கு மாவிளக்கு, கரகம், பெரியமாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் உலாவும் நடந்தது. இன்று (1ம் தேதி) காலை, 9.30 மணிக்கு சின்னமாரியம்மன் கோவிலில் பொங்கல் விழாவும், காலையில் தேர் வடம் பிடித்தலும், மாலை, 4 மணிக்கு, தேர் வடம் பிடித்தலும் நடந்தது.நாளை (2ம் தேதி) மாலை, 4 மணிக்கு தேர் வடம் பிடித்தலும், இரவு, 9.30 மணிக்கு பெரிய மாரியம்மன் மலர் பல்லக்கில் திருவீதி உலாவும் நடக்கிறது.வரும், 3ம் தேதி மாலை, 4 மணிக்கு தேர் வடம் பிடித்து, சின்னமாரியம்மன் சன்னதி நிலை சேர்தலும், இரவு, 10 மணிக்கு சின்னமாரியம்மன் மலர் பல்லக்கில் திருவீதியுலாவும், இரவு, 9.30 மணிக்கு காரை வாய்க்கால் மாரியம்மன் மலர் பல்லக்கில் திரு வீதி உலா வருதலும் நடக்கிறது.வரும், 4ம் தேதி மதியம், 3 மணிக்கு கம்பங்களை எடுத்தல் மற்றும் மஞ்சள் நீர் விழாவும், 5ம் தேதி காலை, 10.30 மணிக்கு மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது. இவ்விழாவுக்காக, பிரப் ரோட்டில் மிக பிரம்மாண்டமான தற்காலிக கடைகள் அமைக்கப் பட்டு, பல்வேறு பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. ஏற்பாடுகளை அறநிலையத்துறை உதவி ஆணையர் சபர்மதி, கோவில் செயல் அலுவலர் ராஜா ஆகியோர் செய்கின்றனர்.எஸ்.பி., சிபிசக்கரவர்த்தி உத்தரவுப்படி, இம்மூன்று கோவிலிலும், சிறப்பு பந்தோப ஸ்து ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !