உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தாயமங்கலம் கிராமங்களில் ஏப்.5ல் பொங்கல் விழா: மழை பெய்ததால் மகிழ்ச்சி

தாயமங்கலம் கிராமங்களில் ஏப்.5ல் பொங்கல் விழா: மழை பெய்ததால் மகிழ்ச்சி

இளையான்குடி: தாயமங்கலத்தில் நேற்று பெய்த மழையால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்தது. கோயிலைச் சுற்றியுள்ள கிராம மக்கள் பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாட ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். தாயமங்கலத்தில் பங்குனித் திருவிழா பத்து நாட்கள் நடைபெறும். கோயிலை சுற்றியுள்ள கிராம மக்கள் பங்குனி முதல் தேதி முதல் விரதம் இருந்து திருவிழா துவங்கியதும் அக்னிச்சட்டி, ஆயிரங்கண்பானை, மாவிளக்கு, அலகு குத்துதல் உட்பட பல நேர்த்தி கடன்களை அம்மனுக்கு செலுத்துவது வழக்கம். பொங்கல் நாளன்று காலை இக்கிராமங்களை சேர்ந்த மக்கள் தாயமங்கலம் திசையை நோக்கி பொங்கல் வைத்து, ஆடு,கோழிகளை பலியிடுவர். பின்னர் கோயிலுக்கு வந்து தங்களது நேர்த்தியை செய்வது வழக்கம். கோயிலில் காப்பு கட்டி கொடியேற்றிய நாள் அல்லது மறு நாள் மழை பெய்வது வழக்கம். இந்த ஆண்டு மார்ச்29ல் இரவு 11.15 மணிக்கு கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. இந்த ஆண்டு நேற்று முன்தினம் வரை மழை பெய்யவில்லை. இதனால் தாயமங்கலத்தை சுற்றியுள்ள கிராம மக்கள் வருத்தத்துடன் இருந்தனர். இந்நிலையில் தாயமங்கலத்தில் நேற்று காலை 11.45 மணி முதல் 12.15 மணி வரை மழை பெய்தது.வெயிலின் வெப்பம் தணிந்தது. பக்தர்கள் வெயிலின் தாக்கம் இல்லாமல் மகிழ்ச்சியுடன் பொங்கல் வைத்து வழிபட்டு சென்றனர். மேலும் சுற்றியுள்ள கிராம மக்களும் , ஏப் 5ல் நடக்கும் பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாட ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !