திரவுபதி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்
உத்திரமேரூர்: உத்திரமேரூர், திரவுபதி அம்மன் கோவிலில் நேற்று காலை, மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. உத்திரமேரூரில், 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில், கடந்த சில ஆண்டுகளாக முறையான பராமரிப்பின்றி போனது. ரூ.80 லட்சம் செலவில் இதையடுத்து, இக்கோவிலை புனரமைக்க தீர்மானிக்கப்பட்டது. பக்தர்களிடம் இருந்து நன்கொடை மூலம் கிடைத்த வசூலில், 80 லட்சம் ரூபாய் செலவில், திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த, 2 ஆண்டுகளாக நடந்து திருப்பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, கடந்த, 26ம் தேதி காலை, 10:00 மணிக்கு கோ பூஜை, குரு பூஜை, விநாயகர் பூஜையுடன் கும்பாபிஷேக பூஜைகள் துவங்கின. 30ம் தேதி முதல், பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டன. நேற்று காலை, 6:00 மணிக்கு, மூன்றாம் கால கலச விளக்கு வேள்வியை தொடர்ந்து, காலை, 10:00 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதில், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக மக்கள் தொண்டு இயக்க நிறுவன தலைவர் அன்பழகன் மற்றும் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க வார வழிபாட்டு மன்ற துணை தலைவர் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டு, விஷேச பூஜைகள் நடத்தி, புனிதநீர் ஊற்றினர். உத்திரமேரூர் மற்றும் அப்பகுதியை சுற்றி உள்ள நூற்றுக்கணக்கான பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டு வழிபாடு மேற்கொண்டனர்.
அகத்தீஸ்வரர் கோவில்: உள்ளாவூர் கிராமத்தில், பழமை வாய்ந்த அகிலாண்டேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் கோவில் மற்றும் புதிதாக கட்டப்பட்ட வரசக்தி விநாயகர் கோவில்களுக்கு நேற்று காலை கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. நேற்று காலை 6:00 மணி அளவில், நான்காம் கால பூஜையுடன் கும்பாபிஷேகப் பூஜைகள் துவங்கின. அதைத்தொடர்ந்து 9:00 மணி அளவில், கலசம் புறப்பாடும்; 9:30 மணி அளவில், மேள தாளங்கள் ஒலிக்க அதிர்வேட்டுகள் முழுங்க அகத்தீஸ்வரருக்கு மகா கும்பாபிஷேகமும் கோலாகலமாக நடந்தது. அதை தொடர்ந்து, பகல் 2:00 மணிக்கு திருக்கல்யாண வைபவமும் நடந்தது.
வரசித்தி விநாயகர் கோவில்: திருத்தணி பழைய பஜார் தெருவில், வரசித்தி விநாயகர் கோவிலில், புதியதாக சுப்ரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானை விக்ரஹங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இந்த சன்னிதிகளுக்கு நேற்று மகா கும்பாபிஷேகம் நடந்தது. இரவு, 7:00 மணிக்கு உற்சவர் விநாயகர் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கன்னியம்மன் கோவில்: கடம்பத்தூர் - விடையூர் சாலையில் உள்ள கன்னியம்மன் நகரில் அமைந்துள்ளது பரிபூர்ண கன்னியம்மன் கோவில், மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.