முத்தாலம்மன் மின்னொளி அலங்கார தேரில் வீதி உலா!
பரமக்குடி : பரமக்குடி முத்தாலம்மன் கோயில் பங்குனி விழாவையொட்டி, அம்மன் மின்னொளி அலங்கார தேரில் வீதி உலா வந்தார். இக்கோயிலில் பங்குனி உத்திர விழா மார்ச் 27ல், கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி தினமும் பூதகி, ரிஷப, சிங்க, காமதேனு, கிளி, குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வந்தார். முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு மேல் அம்மன் மின்னொளி அலங்கார தேரில் வீதி உலா வந்தார். பின்னர் தீ வெட்டிகள் வெளிச்சத்தில் அம்மன் தேர் ஆடி, அசைந்து, பக்தர்களின் "சக்தி கோஷம் முழங்க, நான்கு மாட வீதிகளை சுற்றி வந்தார். நேற்று அதிகாலை 4 மணிக்கு அம்மன் "கள்ளர் திருக்கோலத்துடன் பூப்பல்லக்கில், வான வேடிக்கைகள் முழங்க வைகை ஆற்றில் எழுந்தருளினார். தொடர்ந்து காலை 6 முதல் இரவு 7 மணி வரை ஏராளமான பக்தர்கள் தீச்சட்டி எடுத்தி நேர்த்தி கடன் செலுத்தினர். இன்று (ஏப்., 6) காலை 4 மணி முதல் வைகை ஆற்றில் இருந்து ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவர். பகல் 11 மணிக்கு அம்மனுக்கு பாலாபிஷேகம் நடக்கிறது. ஏற்பாடுகளை தேவஸ்தான பரம்பரை டிரஸ்டிகள், ஆயிர வைசிய சபையினர் செய்து வருகின்றனர்.