திருநாகேஸ்வரம் கோவிலில் பங்குனி தெப்பத்திருவிழா!
கும்பகோணம் : திருநாகேஸ்வரம் நாகநாத ஸ்வாமி கோவிலில், பங்குனி உத்திர தெப்பத் திருவிழா நடந்தது. கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில், தமிழக நவக்கிரக தலங்களில் ஒன்றான ராகுதலம் நாகநாத ஸ்வாமி கோவில் உள்ளது. மூர்த்தி, தலம்,தீர்த்தம் ஆகிய சிறப்புகள் பெற்ற இத்தலத்தில் நாகநாதசுவாமி, பிறையணியம்மன், கிரிகுஜாம்பிகை மற்றும் ராகுபகவான் மங்களராகுவாகவும் அருள்பாலிக்கின்றனர்.பங்குனி உத்திர திருவிழாவையொட்டி, இங்குள்ள ஆறுமுகசுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மாலை, 6 மணிக்கு ஆறுமுக ஸ்வாமி சூரிய புஷ்கரணியில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளினார். தெப்பத்திருவிழாவை ஆலய முதன்மை அர்ச்சகர் நாகராஜ சிவாச்சாரியார் தலைமையில் சிவாச்சாரியார்கள் உபயதாரர்களாக செய்தனர். விழா ஏற்பாடுகளை ஆலய உதவி ஆணையர் மாரியப்பன் மற்றும் ஆலயப்பணியாளர்கள் செய்தனர்.