கரிவரதராஜப் பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் நிறைவு!
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் கரிவரதராஜப் பெருமாள் கோவிலில், 10ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா நிறைவடைந்தது. பெரியநாயக்கன்பாளையம் ஸ்ரீபூமி நீளாபெருந்தேவி நாயகி சமேத கரிவரதராஜப் பெருமாள் கோவிலில், 10ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த, 29ம் தேதி துவங்கியது. தொடர்ந்து, 10 நாட்கள் தினமும் மாலை, 6:00 முதல் இரவு, 9:00 மணி வரை பிரம்மோற்சவம் நடந்தது. விழாவையொட்டி தினமும் திவ்ய பிரபந்த சேவாகாலம் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. சரஸ்வதி அலங்காரம், சிம்மவாகனம், முத்துப்பந்தலில் காளிங்க நர்த்தன அலங்காரம், அனுமந்த வாகனம், யானை வாகனம், கருட வாகனத்தில் வைரமுடி சேவையில் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து திருக்கல்யாண உற்சவமும், திருவீதியுலா, பரிவேட்டை, வாணவேடிக்கை, சேஷவாகனம், தெப்பத்தேர், பல்லக்கு சேவை, சந்தன சேவை, சாற்று முறை, தீர்த்தவாரி நிகழ்ச்சிகளும் நடந்தன.