காப்புச் செய்யுள்
ADDED :3841 days ago
பூமருவும் சோலைப் புலியூர் அரன்சதகத்
தாமம் இயற்றத் தமிழுதவு- மாமன்
தருவான் அனத்தான் தகையருளு மாச்சீர்
தருவா னைத்தான் சரண்.
பதினான்கு சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1. அவையடக்கம்
கங்கைக்கு நுரையுண்டு பூவினுக்கு அளறுண்டு
கருதநெற்கு உமிகள் உண்டு
கவின்மலர்க் குப்புலிதழ் உண்டரா வுண்கிரண
காலமுண் டெழுக திர்க்குத்
திங்கட்கு நடுவினிற் களங்கமுண் டினியபூந்
தேனுக்குள் எச்சில் உண்டு
தேவர்கட்கு ஆணவா தியமும் மலப்பவஞ்
செறிவதுண் டுயர்க மலைநேர்
மங்கையர் தமக்குமதி தொறும்விலக் குண்டுசுவை
மல்கு நற்கனி யாசினி
மாமுதற் றருவின்ற் பயினுண்டு முனியுண்ட
வாரிதிக் குவருண் டதால்
எங்கவிதை முழுதினும் புன்சொலுண் டதைநீக்கி
ஏற்றமிகு சிதம்ப ரப்பேர்
இசைதலாற் கொண்டகம் மகிழ்ந்திடுவர் முத்தமிழ்
இலக்கண அருங்க விஞரே.