பதஞ்சலீஸ்வரர் கோவிலில் மூலவர் மீது சூரிய ஒளிபடும் நிகழ்வு!
காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் கால்நாட்டம்புலியூர் பதஞ்சலீஸ்வரர் கோவிலில் மூலவர் சிவலிங்கம் மீது சூரிய ஒளி படும் அதிசய நிகழ்வு நடந்தது. வரலாற்று சிறப்பு மிக்க இக்கோவில் நாகதோஷ பரிகார தலமாகவும், பதஞ்சலி முனிவர் வழிபட்டபோது பகவான் காட்சி தந்த இடமாகவும் உள்ளது. மேலும், சுந்தரமூர்த்தி நாயனார் பாடல் பெற்றதும், கார்த்திகை நட்சத்திரத்திற்கு விசேஷ தலமாகவும் விளங்கி வருகிறது. இக்÷ காவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை 1ம் தேதி சூரிய பகவான் நேரடியாக மூலவரான சிவலிங்கம் மீது படும் அதிசய நிகழ்வு நடந்து வருகிறது. சித்திரை 1ம் தேதியான நேற்று காலை 6:05 மணிக்கு சூரிய ஒளி நேரடியாக சிவன் மீது படத் துவங்கியது. படிப்படியாக மேலிருந்து கீழே இறங்கிய சூரிய ஒளியின் பிரகாசத்தில் சிவலிங்கம் பொன் போல் மின்னியது கண்டு பக்தர்கள் பரவசமடைந்தனர். 15 நிமிடம் நீடித்த இந்த சூரிய வழிபாட்டு நிகழ்வை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.