நாமக்கல் கோவில்களில் ஏராளமான பக்தர்கள் ஸ்வாமி தரிசனம்!
நாமக்கல்: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. அதில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமியை வழிபட்டனர்.நாமக்கல் நகரின் மையத்தில், பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் ஸ்வாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் தமிழகம் மட்டும் அல்லாமல், பிற மாநிலத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்து, ஸ்வாமியை வழிபட்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, நேற்று காலை முதல், ஸ்வாமிக்கு, சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. ஆஞ்சநேயர் ஸ்வாமிக்கு பஞ்சாமிர்தம், பால், தயிர், திருமஞ்சனம், சந்தனம், இளநீர் உள்ளிட்ட, பல்வேறு பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.சிறப்பு அலங்காரத்தில், ஸ்வாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதில், நாமக்கல் மாவட்டம் உள்பட பல்வேறு மாவட்ட மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர், பங்கேற்று ஸ்வாமியை வழிபட்டுச் சென்றனர்.நாமக்கல்-மோகனூர் சாலை பாலதண்டாயுதபாணி, பலப்பட்டறை மாரியம்மன், ஏகாம்பரேஸ்வரர், மோகனூர் காந்தமலை பாலதண்டாயுதபாணி, அசலதீபேஸ்வரர், கல்யாண பிரசன்ன வெங்கட் ரமண பெருமாள், சேந்தமங்கலம் தத்தகிரி முருகன் கோவில், கருமலை பாலமுருகன், கூவமலை பாலசுப்ரமணியர், நாமக்கல்-பரமத்தி சாலை, மாயவர், சமயபுரம் மாரியம்மன் கோவில் ஆகிய கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.ராசிபுரம் கைலாசநாதர், மாரியம்மன், வரதராஜ பெருமாள், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர், கொல்லிமலை அரப்பளீஸ்வரர், ப.வேலூர் காசி விஸ்வநாதர், பஞ்சமுக ஹேரம்ப மகா கணபதி, கபிலர்மலை பாலசுப்ரமணியர், குமாரபாளையம் மாரியம்மன், ஐயப்பன், காளிப்பட்டி கந்தசாமி கோவில் உள்பட, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடும், அபிஷேகமும் கோலாகலமாக நடந்தது.அதில், சுற்று வட்டாரத்தை சர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமியை வழிபட்டனர்.