பாகனை விரட்டிய திருப்புத்தூர் கோயில் யானை!
திருப்புத்தூர்: திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயில் யானை நேற்று முன்தினம் இரவு பாகனை துரத்தியதால் பக்தர்களை பாதுகாப்பாக கோயில் நிர்வாகத்தினர் வெளியேற்றினர். சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் கோயில் யானை சிவகாமி,44. இந்த பெண் யானை பக்தர்களிடம் பாசத்துடன் பழகக்கூடியது. அவ்வப்போது பாகனிடம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தும். தமிழ்ப்புத்தாண்டு அன்று காலை வெளியே சென்ற யானை பாகனை எதிர்த்ததால், பாகனின் உதவியாளர் கோயிலுக்கு அழைத்து வந்துள்ளார். யானை கோயிலினுள் செல்ல தயங்கியது. பின்னர் கோயிலுக்குள் அழைத்துச் சென்றதும், பாகனை விரட்டத் துவங்கியது. பாகன் சிறிய வாசல் வழியாக தப்பினார்.பக்தர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். அங்கிருந்த பணியாளர்கள் யானையை சமாதானப்படுத்த முயன்றனர். நாதஸ்வர கலைஞர் மணிகண்டன் கொடுத்த வாழைப்பழத்தை வாங்கி யானை சாப்பிட்டு சமாதானம் அடைந்தது. பின்னர் யானையின் கால்களை கயிற்றால் மரத்தில் கட்டினார். தொடர்ந்து மற்ற பணியாளர்கள் சேர்ந்து பின்னங்கால்களை சங்கிலியால் கட்டி அமைதிப்படுத்தினர். நேற்று வழக்கம் போல் தனது செயல்பாட்டிற்கு சிவகாமி திரும்பியது. இந்த பாகன் திறமைசாலி என்றாலும், போதை பழக்கத்தால் அவ்வப்போது யானையிடம் சிக்கிக் கொள்வது நடக்கிறது. யானையின் காலில் உள்ள ஆறாத ரணம் பாதிக்கப்படும் வகையில் யானை நடத்தப்படும் போதெல்லாம், அது தனது கோபத்தை வெளிப்படுத்துவது வழக்கம்.