உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீரங்கம் ரெங்கநாதருக்கு கிராம மக்கள் காணிக்கையாக செலுத்தும் திருப்பாதம்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதருக்கு கிராம மக்கள் காணிக்கையாக செலுத்தும் திருப்பாதம்

துறையூர்: ஸ்ரீரங்கம் சித்திரை தேரோட்ட நிகழ்ச்சியில், ரெங்கநாதர் ஸ்வாமிக்கு காணிக்கையாக செலுத்த, பெரமங்கலம் கிராமத்தில் இருந்து எடுத்துச் செல்லும் திருப்பாததுக்கு சிறப்பு பூஜை செய்தனர். திருச்சி மாவட்டம், புலிவலம் அருகே உள்ள பெரமங்கலம் கிராமத்தில் வசிக்கும் மக்கள், ஸ்ரீரங்கம் சித்திரை தேரோட்டத்தின் போது, தேரில் எழுந்தருளும் ஸ்வாமிக்கு, திருப்பாதம் கட்டி, ஊர்வலமாக எடுத்துச் சென்று கல் மண்டபத்தில் ஒப்படைத்து வந்தனர். பல்வேறு வேறு காரணங்களால், தடைபட்டிருந்த அந்த விழா, 30 ஆண்டுக்கு பின், இந்த ஆண்டு நடக்கிறது. கடந்த, 11ம் தேதி, ஸ்வாமிக்கு பாதம் கட்டும் விழா துவங்கியது. தொடர்ந்து பெரமங்கலம், குருவிக்காரன்குளம், மணியம்பட்டி கிராமங்கள் வழியாக, நாளை மாலை, 4.30 மணிக்கு ஸ்ரீரங்கம் கோவிலுக்கு திருப்பாதம் எடுத்துச் செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது. தேரோட்டம் நடைபெறும், 18ம் தேதி, தழுகை படையலிட்டு, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் உள்ள கல் மண்டபத்தில், திருப்பாதம் காணிக்கையாக செலுத்தப்படும். முன்னதாக, திருப்பாதம் எடுத்துச் செல்லும் பூசாரியாக தேர்வு செய்யப்பட்ட தர்ஷன் என்ற சிறுவன், திருப்பாதத்துக்கு சிறப்பு பூஜை செய்வதற்காக, நேற்று ஊர்வலமாக எடுத்துச் சென்றார். திருப்பாதம் காணிக்கையாக செலுத்தும் விழா குறித்து கிராம மக்கள் கூறியதாவது: கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த காவல்காரன்பட்டி அருகில் உள்ள சின்ன புத்தூர் கிராமத்தை சேர்ந்த மூக்கன், 78, என்பவர் விரதமிருந்து, பெரமங்கலத்திலேயே தங்கி, திருப்பாதம் கட்டும் பணிகளை செய்தார். பாதத்தை எடுத்துச் செல்ல, 6ம் வகுப்பு படிக்கும் மாணவர் தர்ஷன் பூசாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் விரதமிருந்து, தலையில் திருபாதத்தை சுமந்து சென்று, ஸ்ரீரங்கம் கல் மண்டபத்தில் ஒப்படைப்பார். இவ்வாறு அவர்கள் கூறினர். திருப்பாதம் செய்த மூக்கன் கூறியதாவது: ஸ்வாமி திருப்பாதம் செய்வதை பாக்கியமாக கருதுகிறேன். ஏற்கனவே, பழனி முருகனுக்கு திருப்பாதம் செய்துள்ளேன். ஸ்ரீரங்கம் ரெங்கநாதருக்கு முதல் முறையாக செய்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !