மோகனூர் மாரியம்மன் கோவில் குண்டம் விழா கோலாகலம்
மோகனூர்: மாரியம்மன் கோவில் குண்டம் விழாவை முன்னிட்டு, நாளை, 108 பால்குடம், 108 சங்காபிஷேகம் மற்றும் பூச்சொரிதல் விழா கோலாகலமாக நடக்கிறது. மோகனூரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில், ஆண்டு தோறும் குண்டம் இறங்கும் விழா கொண்டாடப்படும். கடந்த, 13ம் தேதி காப்புகட்டுதலுடன் விழா, துவங்கியது. தொடர்ந்து, தினமும் காவிரி ஆற்றுக்கு செல்லும் பக்தர், புனித நீராடி, தீர்த்தம் எடுத்து வந்து, கோவில் முன் நடப்பட்டுள்ள கம்பத்துக்கு ஊற்றி வழிபட்டுச் செல்கின்றனர். வரும், 26ம் தேதி மாலை, வடிசோறு வைத்து அம்மனுக்கு படையல் வைக்கப்படும். 27ம் தேதி அதிகாலை, 5 மணிக்கு பூக்குழி பூஜை போடப்படும். அன்று மதியம், 1 மணிக்கு காவிரி ஆற்றுக்கு செல்லும், ஏராளமான பக்தர், புனித நீராடி ஊர்வலமாக வந்து, கோவில் முன் ஏற்படுத்தப்பட்டுள்ள குண்டத்தில் இறங்கி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். அன்று மாலை, 6 மணிக்கு மாவிளக்கு பூஜை நடக்கிறது. வரும், 28ம் தேதி காலை, 6 மணிக்கு கிடா வெட்டு, மாவிளக்கு பூஜை நடக்கிறது. தொடர்ந்து, பக்தர் அலகு குத்தியும், அக்னி சட்டி எடுத்தும், அம்மனுக்கு தங்களது வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர்.
வரும், 29ம் தேதி அதிகாலை, 5 மணிக்கு கம்பம் பிடிங்கி ஆற்றில் விடுப்படும். காலை, 9 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. சிறப்பு அலங்காரத்தில், ஸ்வாமி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். முன்னதாக, நாளை (ஏப்., 19) அம்மன் நற்பணி மன்றம் சார்பில், 22ம் ஆண்டு, 108 பால்குட அபிஷேகம், 108 சங்கு அபிஷேகம் மற்றும் பூச்சொரிதல் விழா, என, முப்பெரும் விழா கோலாகலமாக நடக்கிறது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. அதை தொடர்ந்து, மாலை, 6 மணிக்கு மீண்டும் காவிரி ஆற்றுக்கு செல்லும் பக்தர், பூஜை முடித்து, பூந்தட்டுடன் ஊர்வலமாக கோவிலுக்கு வருகின்றனர். தொடர்ந்து ஸ்வாமிக்கு பூச்சொரிதல் விழா சிறப்பாக நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை, அம்மன் நற்பணி மன்ற நிர்வாகி, உறுப்பினர் செய்துள்ளனர்.