அருணாச்சலேஸ்வரர் கோவில் வசந்த உற்சவம் துவக்கம்!
ADDED :3819 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில், சித்திரை வசந்த உற்சவம், இன்று துவங்குகிறது. இதுகுறித்து, கோவில் இணை ஆணையர் செந்தில்வேலவன் கூறியதாவது: சித்திரை வசந்த உற்சவம், இன்று துவங்கி, மே, 2ம் தேதி வரை நடைபெற உள்ளது. தினமும் காலை, உற்சவர் பெரிய நாயகருக்கு, சிறப்பு அபிஷேக, ஆராதனை, இரவு மண்டகப்படி நடைபெறும். மே, 2ம் தேதி காலை, அய்யங்குளத்தில் தீர்த்தவாரி, இரவு கோபால விநாயகர் கோவிலில் மண்டகப்படி, இரவு, 10:00 மணிக்கு, கோவில் வளாகத்தில், மன்மத தகனம் நிகழ்ச்சி நடைபெறும். கோவிலில், ஏப்ரல் மாதத்திற்கான, உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, நேற்று முன்தினம் நடந்தது. ஒரு மாதத்தில், 61 லட்சம் ரூபாய் ரொக்கம், 190 கிராம் தங்கம், 935 கிராம் வெள்ளி, காணிக்கையாக கிடைத்துள்ளது. இவ்வாறு, செந்தில்வேலவன் தெரிவித்தார்.