பாபநாசம் அருகே ஸ்வாமி சிலைகள் கண்டெடுப்பு!
பாபநாசம்: தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே வேம்பங்குடி பஞ்சாயத்துக்குட்பட்ட புரசகுடி கிராமத்தில் உள்ள ஞானாம்பிகை சமேத காளகஸ்தீசுவரர் கோவிலில் முன்புறத்தில் உள்ள குளத்தில் அண்ணாமறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் வடிகால் அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது உலோக சிலைகள் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து பஞ்சாயத்து தலைவர் சௌந்தர்ராஜன் கொடுத்த தகவலின்பேரில் பாபநாசம் தாசில்தார் பாண்டியராஜன், ஆர்.ஐ., பழனியப்பன், வி.ஏ.ஓ., சரவணகுமார், அறநிலையதுறை அலுவலர் கனகசுந்தரம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்றனர். கண்டெடுக்கப்பட்ட நடராஜர் சிலை, கண்ணன் சிலை, சோமாஸ்கந்தர், சிவபெருமானின் தலைப்பகுதி மற்றும் நான்கு பீடங்களை மீட்டு பாபநாசம் தாசில்தார் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். கண்டெடுக்கப்பட்ட சிலைகளின் மதிப்பு உடனடியாக தெரியவில்லை. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.