நல்லூர் கோவிலுக்கு கும்பாபிஷேகம்: பக்தர்கள் எதிர்பார்ப்பு!
திருப்பூர் : திருப்பூர் "பெரிய கோவில் என்று அழைக்கப்படும் நல்லூர் கோவிலுக்கு, கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என பக்தர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது. திருப்பூர் அருகே நல்லூரில் விசாலாட்சி உடனமர் விஸ்வேஸ்வர சுவாமி, சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. 1,200 ஆண்டுகள் பழமையான இக்கோவில், ஐந்து நிலை கோபுரம் உள்ளது. திருப்பூர் சுற்றுப்புற பகுதிகளுக்கு, தலைநகராக நல்லூர் இருந்ததற்கான ஆதாரமாக, கல்வெட்டுக்கள், சங்க கால இலக்கியங்கள், பட்டயம் என, பல்வேறு சான்றுகள் உள்ளன. பழமையான இக்கோவிலில், கடந்த 2000ம் ஆண்டு ஜூன் 5ம் தேதி, கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆகம விதிப்படி, 12 ஆண்டுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும். ஆனால், 14 ஆண்டுகளுக்கு மேலாகியும், நல்லூர் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்துவதற்கான ஆரம்ப கட்ட பணிகள் கூட, இதுவரை துவங்கப்படவில்லை. இது, பக்தர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
பக்தர்கள் கூறுகையில், "பிரமாண்டமாக உள்ள இக்கோவிலின் கோபுரங்கள், வர்ணங்களின்றி, பொலிவிழந்து காணப்படுகிறது. கோவிலில் திருப்பணிகள் செய்து, உடனடியாக கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். இக்கோவிலுக்கு பல கோடி ரூபாய் வரை இருப்பு உள்ளதால், நிதி பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பில்லை. அதிகளவு பக்தர்கள் வந்து செல்வதால், உபயதாரர்கள் திருப்பணி செய்யவும் தயாராக உள்ளனர். ஆனால், அறநிலையத்துறை தரப்பில் இருந்து, கும்பாபிஷேகத்துக்கான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, என்றனர். கோவில் செயல் அலுவலர் பசவராஜனிடம் கேட்டபோது, ""அன்னதான மண்டபம் கட்டுமான பணிகள் நடைபெறுகிறது. கோவிலின் பழமை மாறாமல் புதுப்பிக்கும் வகையில், திருப்பணிகளுக்கு திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. திருமேனிகள் பாதுகாப்புக்கு அறை கட்டப்பட உள்ளது. பெரியளவிலான வேலைகள் இல்லை. திருப்பணிக்கான ஏற்பாடுகள் விரைவில் துவங்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தப்படும், என்றார்.