உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரம் கோயில் நிலம் 40 ஆண்டுகளுக்கு பிறகு மீட்பு

ராமேஸ்வரம் கோயில் நிலம் 40 ஆண்டுகளுக்கு பிறகு மீட்பு

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு சொந்தமான ரூ.2 கோடி மதிப்புள்ள சொத்து,40 ஆண்டுக்கு பிறகு மீட்கப்பட்டது. ராமேஸ்வரம் திருக்கோயிலுக்கு சொந்தமான 5.20 ஏக்கர் நிலம், சேதுக்கரை சேக்கிரயார் சத்திரம் என்ற இடத்தில் உள்ளது. தென்னை, மா, கொய்யா மரங்கள் உள்ள இந்த இடத்தை தனியார் சிலர் ஆக்கிரமித்து, கடந்த 40 ஆண்டுகளாக குத்தகை தொகை தராமல் பயன்படுத்தி வந்தனர். அந்த நிலத்தின் மதிப்பு ரூ.2 கோடி. இதுதொடர்பாக கோயில் நிர்வாகம் சார்பில், ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில், ஏப்., 16 ல், 5.20 ஏக்கர் நிலத்தை ராமேஸ்வரம் திருக்கோயிலுக்கு வழங்கிட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் அந்த நிலத்தை சுற்றி வேலி அமைத்து பாதுகாக்கப்படும் என, கோயில் இணை கமிஷனர் செல்வராஜ் தெரிவித்தார். இதேபோல், ராமேஸ்வரம் கோயிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி சொத்து, தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை, தஞ்சாவூர் மாவட்டங்களில் தனியார்களின் ஆக்கிரமிப்பில் உள்ளது. இதற்குரிய குத்தகை பாக்கி ரூ.40 லட்சத்தை தனியார்கள் செலுத்தாமல் கோயில் ஊழியர்களை மிரட்டு வருகின்றனர். அந்த நிலங்களை மீட்டு, குத்தகைகாரர்கள் மீது இந்து அறநிலையத்துறை கமிஷனர் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாவட்ட இந்து முன்னணி செயலாளர் ராமமூர்த்தி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !