சந்தான வேணுகோபால சுவாமி கோவிலில் கொடியேற்றம்
ஆர்.கே.பேட்டை: சந்தான வேணுகோபால சுவாமி கோவில், சித்திரை பிரம்மோற்சவம், நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது. இன்று, அனுமந்த வாகனத்தில், சுவாமி உலா வந்து எழுந்தருளுகிறார். திருத்தணி முருகன் கோவிலின் உப கோவிலான, எஸ்.வி.ஜி.புரம் சந்தான வேணுகோபால சுவாமி கோவிலில், சித்திரை பிரம்மோற்சவம், நேற்று முன்தினம், கொடியேற்றத்துடன் துவங்கியது. காலை 8:30 மணியளவில், கொடிமரம் அருகே உற்சவர் பெருமான் எழுந்தருளினார். வேத மந்திரங்கள் ஓதப்பட்டு, பிரம்மோற்சவ கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து, கோவில் வளாகத்தில் சுவாமி உலா எழுந்தருளினார். இரவு, 7:30 மணியளவில், அம்ச வாகனத்தில் உற்சவர் வீதியுலா வந்தார். நேற்று மாலை, சிம்ம வாகனத்தில் உலா வந்த உற்சவர், இன்று அனுமந்த வாகனத்தில் எழுந்தருளுகிறார். நாளை மறுதினம், கருட வாகனத்தில் சேவை சாதிக்கிறார். ஞாயிற்றுக்கிழமை காலை தேர் திருவிழா நடைபெறும். 11ம் தேதி சக்கர ஸ்தானத்துடன் பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.