அய்யம்பாளையம் ஆற்றில் இறங்கினார் அழகர்
பட்டிவீரன்பட்டி: சித்திரைத் திருவிழாவையொட்டி சித்தரேவு வரதாராஜபெருமாள் குதிரை வாகனத்தில் அய்யம்பாளையம் மருதா நதியில் இறங்கினார். சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. முன்னதாக ஏப்., 30ல் வரதராஜபெருமாள், பூமாதேவி திருக்கல்யாணம் நடந்தது. நேற்று முன் தினம் அய்யம்பாளையம் மருதா நதியில் இறங்குவதற்காக குதிரை வாகனத்தில் புறப்பட்டார். நேற்று நெல்லூர், கதிர்நாயக்கன்பட்டி வழியாக காலை 7.15 மணிக்கு அய்யம்பாளையம் மருதா நதியில் இறங்கினார். அழகரை கோவிந்தா கோஷமிட்டு வரவேற்றனர். பக்தர்களுக்கு சர்க்கரை, அவல், பொரி வழங்கப்பட்டது. மொட்டை அடித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். யாதவர் குல எதிர்சேவை நடந்தது. தொடர்ந்து அய்யம்பாளையம் அய்யனார் கோயிலில் தரிசனம் தந்தார். அழகர் பொட்டல் ஆயிர வைசியர் மண்டகப்படியில் நேற்று இரவு தங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இன்று தசாவதாரம் நடக்கிறது. நாளை ஆஞ்சநேயர் வாகனத்தில் அய்யம்பாளையத்தில் நகர்வலம் வருகிறார். நாளை மறுநாள் பூப்பல்லக்கில் சித்தரேவு லட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலுக்கு பூப்பலக்கில் புறப்படுகிறார். வெள்ளியன்று காமதேனு வாகனத்தில் சித்தரேவில் மஞ்சள் நீராட்டுடன் நகர் வலம் வந்து கோயிலைச் சென்றடைகிறார்.
அணைப்பட்டி: இங்கும் வைகை ஆற்றில் அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதிகாலை 4 மணிக்கு மாலைப்பட்டியில் இருந்து கிளம்பி பிள்ளையார்நத்தம், செக்காபட்டி, சிறுநாயக்கன்பட்டி, சொக்குபிள்ளைபட்டி வழியாக அணைப்பட்டி வைகை ஆற்றை வந்தடைந்தார். காலை 7.15 மணியளவில் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சியளித்தார். நேற்று மதியம் ஆண்டி செட்டியார் மண்டகப்படி, இரவு நாட்டாமை மண்டகப்படியில் தங்கினார். இன்று மாலை வரை ஆஞ்சநேயர் கோயில் மண்டகப்படியில் தங்கும் அழகர், நாளை காலை மாலைப்பட்டி சென்றடைகிறார்.