உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தொண்டி பகுதிகளில் சித்ரா பவுர்ணமி சிறப்பு பூஜை

தொண்டி பகுதிகளில் சித்ரா பவுர்ணமி சிறப்பு பூஜை

திருவாடானை: சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, தொண்டி பகுதிகளில் உள்ள கோயில்களில் சிறப்பு பூஜை நடந்தது. அஞ்சுகோட்டை கருப்பர் கோயில், திருவாடானை மேலரதவீதி, நம்புதாளை, கண்ணாரேந்தல், சேந்தனி போன்ற பல கிராமங்களில் உள்ள கருப்பர் கோயில்களில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பக்தர்கள் பூக்குழி, காவடி மற்றும் அக்னிசட்டி எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர்.

* சாயல்குடி அருகே மாரியூரில் ராமநாதபுரம் சமஸ்தான, தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட பவளநிற வள்ளியம்மன், ஸ்ரீபூவேந்தியநார் கோயிலுக்கு சித்ரா பவுர்ணமி திருக்கல்யான விழா நடந்தது. நேற்று காலை 7 மணியளவில் மாரியூர் கடற்கரையில் மீனவ மக்களிடையே வலை வீசும் விழா நடந்தது. காலை 9.30 மணியளவில் ஸ்ரீபவளநிற வள்ளிக்கும், ஸ்ரீ பூவேந்திய நாதருக்கும் திருக்கல்யாணம் நடந்தது. இதில், முந்தல், மாரியூர் மற்றும் சுற்று வட்டார மீனவ மக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
* சாயல்குடி அருகே காணிக்கூரில் பாதாள காளியம்மன் கோயிலில் விளக்கு பூஜை நடந்தது. இதையொட்டி, அம்மனுக்கு நேற்று இரவு 8 மணியளவில் பால், நெய், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகம் முடிந்து அலங்காரம் நடந்தது. இரவு 10 மணியளவில் விளக்கு பூஜை நடந்தது. இதேபோல், பிள்ளையார்குளம் பனையூர் அம்மன், டி.எம்.கோட்டை அங்காள பரமேஸ்வரி கோயிலிலும் விளக்கு பூஜை நடந்தது.
* கீழக்கரை அருகே மாயாகுளம், தச்சன்ஊரணி செங்காட்டு உடைய அய்யனார் கோயிலில் திருவிளக்கு பூஜை நடந்தது. ஓம்சக்தி மன்ற முனியம்மாள், முத்துச்செல்வி சிறப்பு பூஜைகளை நடத்தினர். மூலவரான பூரண, புஸ்கலா சமேத அய்யனாருக்கு அபிஷேக, ஆராதனைகளை பூசாரி பெரியசாமி செய்தார். பெண் பக்தர்கள் பொங்கலிட்டு வழிபட்டனர். ஏற்பாடுகளை மாதாந்திர வழிபாட்டு குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !