உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆற்றில் இறங்கிய கிராம உற்சவ மூர்த்தி ஆயிரக்கணக்கானோர் வழிபாடு

ஆற்றில் இறங்கிய கிராம உற்சவ மூர்த்தி ஆயிரக்கணக்கானோர் வழிபாடு

திருவண்ணாமலை: பெரணமல்லூர் அடுத்த, நாராயணமங்கலத்தில், கந்தர்மாமலை அருகே செய்யாறு ஆற்று படுகை செல்கிறது. இந்த ஆற்றில் ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமியன்று, ஆற்று திருவிழா வெகு விமர்சையாக நடந்து வருகிறது. வழக்கம் போல், சித்ராபவுர்ணமியான நேற்று முன்தினம் ஆற்று திருவிழா கோலாகலமாக நடந்தது. இதில், நாராயணமங்கலம், கொளப்பலூர், விநாயகபுரம், மேல்சாத்தமங்கலம், கிண்ணனூர், இமாபுரம், சின்ன விநாயகபுரம், நரியாம்பாடி, ராமநாதபுரம், மேலானூர், எஸ். காட்டேரி, ஆவணியாபுரம், நமத்தோடு, மரக்குணம் உள்ளிட்ட, 23 கிராமங்களில் உள்ள கிராம தேவதை கோவில்களில் உள்ள மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. இரவு, 7 மணிக்கு, 23 கிராமங்களை சேர்ந்த, விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர், வள்ளி தெய்வானை சமேதமுருகன், மாரியம்மன், உள்ளிட்ட உற்சவ மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் மேளதாளம் முழங்க ஊர்வலமாக, செய்யாறு படுகையில் எழுந்தருளினர். அப்போது, 23 கிராமங்களை சேர்ந்த, ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஸ்வாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். இதை தொடர்ந்து நள்ளிரவு, 12 மணி வரை கரகாட்டம் உள்பட, பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !