பொன்வரதராஜ பெருமாள் கோவிலில் பக்தர்கள் நேர்த்திக்கடன்
ராசிபுரம்: பொன்வரதராஜ பெருமாள் கோவிலில் நடந்த, சித்திரை தேரோட்டத்தில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள், தேரை வடம் பிடித்து இழுத்தனர். ராசிபுரம், பொன்வரதராஜ பெருமாள் கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு விழா, கடந்த, 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, 30ம் தேதி வரை, தினமும் காலையில் சிறப்பு அபிஷேகமும், மாலையில் கருடன், அனுமந்தன், அன்னம், சிம்மம், கஜலட்சுமி உள்ளிட்ட வாகனங்களில், ஸ்வாமி திருவீதி உலா வந்து பக்கதர்களுக்கு அருள்பாலித்தார். மே, 1ம் தேதி காலை, 8 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், மாலை, 6 மணிக்கு, திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடந்தது. நேற்று அதிகாலை 5 மணிக்கு, அபிஷேகம், திருமஞ்சனம், காலை, 8 மணிக்கு, ஸ்வாமி திருத்தேருக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதை தொடர்ந்து, மாலை, 4 மணிக்கு, சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்து ராஜவீதி வழியாக வந்தனர். அப்போது, பக்தர்கள் கோவிந்தா, கோபாலா, நாராயணா என பக்தி பரவசத்தில் கோஷம் எழுப்பினர். இன்று (மே, 5) மாலை, 6 மணிக்கு, தேர் நிலை அடைகிறது. நாளை (மே, 6) காலை, 8 மணிக்கு, தீர்த்தவாரி உற்சவம், மாலை, 6 மணிக்கு, கொடியிறக்கம், இரவு, 7 மணிக்கு, சத்தாபரணம் நடக்கிறது. மே, 7ம் தேதி, காலை, 6 மணிக்கு, வசந்த உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், விழாக்குழுவினர் செய்துள்ளனர்.