வெள்ளி தேரில் காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் பவனி
ADDED :3866 days ago
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவில் வெள்ளித்தேர் உற்சவம், நேற்று முன்தினம் வெகு விமரிசையாக நடைபெற்றது. காஞ்சிபுரம் சுந்தராம்பிகை உடனுறை கச்சபேஸ்வரர் கோவில், சித்திரை பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது. பத்தாம் நாளான நேற்று முன்தினம், வெள்ளித்தேர் உற்சவம் நடைபெற்றது. அன்று மாலை கச்சபேஸ்வரருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. இதையடுத்து, மலர் அலங்காரத்தில் இரவு 8:00 மணியளவில் வெள்ளித்தேரில் சுந்தராம்பிகையுடன் கச்சபேஸ்வரர் எழுந்தருளி, ராஜவீதிகளில் பவனி வந்தார். ராஜ வீதிகளில் உலா வந்த சுந்தராம்பிகை அம்பாள் உடனுறை கச்சபேஸ்வரர், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின், வாண வேடிக்கை நடைபெற்றது. பலவிதமான பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. வானத்தில் ஏற்பட்ட வர்ண ஜாலத்தை காண ஏராளமானோர் கச்சபேஸ்வரர் கோவில் முன் கூடினர்.