சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் கலப்பட வெல்லம்!
தேனி: பெரியகுளம் லட்சுமிபுரத்தில் இருந்து சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு கர்நாடகாவில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட வெல்லத்தை, லட்சுமிபுரம் தயாரிப்பு எனக்கூறி அனுப்பி வருகின்றனர்.தேனியை அடுத்துள்ள பெரியகுளம் லட்சுமிபுரத்தில் காய்ச்சப்படும் வெல்லம் தரம் வாய்ந்தது. எனவே இந்த வெல்லத்தினை சபரிமலை ஐயப்பன்கோயிலுக்கு பாயாசம் காய்ச்சுவது, பூஜைகள், பிரசாதங்கள் தயாரிப்பதற்கு கொள்முதல் செய்கின்றனர். கேரள மார்க்கெட்டுகளுக்கு லட்சுமிபுரம் வெல்லமே அதிகம் அனுப்பப்பட்டு வந்தது.
வியாபாரிகளின் பேராசையால் இதிலும் கலப்படம் புகுந்து விட்டது. கர்நாடகா மாநிலம் மாண்டியாவில் இருந்து வெல்லம் கொள்முதல் செய்து லட்சுமிபுரம் கொண்டு வருகின்றனர். இந்த வெல்லம் தரம் குறைந்தது. உப்புச்சுவை மிகுந்தது. இனிப்புச்சுவை குறைந்தது. விலையும் கிலோவிற்கு 35 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
ஆனால் லட்சுமிபுரம் வெல்லத்தில் உப்புச்சுவை இருக்காது. இனிப்புச்சுவை அதிகம் இருக்கும். கலரும் நல்ல முறையில் இருக்கும். லட்சுமிபுரம் வெல்லம் கிலோ 55 ரூபாய்.
லட்சுமிபுரத்தை சேர்ந்த சில வெல்ல வியாபாரிகள், கர்நாடகாவில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட வெல்லத்தை லட்சுமிபுரம் மார்க்கெட்டில் தயாரானது எனக்கூறி, கேரள மார்க்கெட்டுகளுக்கும், சபரிமலை ஐய்யப்பன் கோயிலுக்கும் அனுப்பி வருகின்றனர். இதனால் லட்சுமிபுரம் விவசாயிகள் பலர் அதிருப்தியில் உள்ளனர்.