உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விபத்தில் பலியான சிறுமிக்கு கோவில் கட்டி கொண்டாடும் கிராம மக்கள்!

விபத்தில் பலியான சிறுமிக்கு கோவில் கட்டி கொண்டாடும் கிராம மக்கள்!

மணப்பாறை: மணப்பாறை அருகே, விபத்தில் பலியான சிறுமிக்கு கோவில் கட்டிய உறவினர்கள், பால்குடம் எடுத்தும், பூக்குழி இறங்கியும் திருவிழா நடத்தினர்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகேயுள்ள வெள்ளையம்மாபட்டியைச் சேர்ந்தவர் டைலர் பழனிச்சாமி, 45. இவரது மனைவி லட்சுமி, 37. இவர்களுக்கு காவியா, 12, தனுஜா ( இறக்கும் போது வயது 4) என்ற, இரு பெண் குழந்தைகள் இருந்தனர். கடந்த, 2007ம் ஆண்டு டிசம்பர், 23ம் தேதி குழந்தைகள் இருவருக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

மனைவி மற்றும் குழந்தைகளையும், பழனிச்சாமி பைக்கில் மணப்பாறையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அப்போது, பன்னாங்கொம்பு அருகே பால்வேன் பைக் மீது மோதியதில் படுகாயமடைந்த தனுஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தனுஜாவின் இறுதிச் சடங்கு முடிந்த பின், ஸ்ரீரங்கம் அம்மாமண்டபத்தில், அவரது ஈம காரியங்களை செய்து கொண்டிருந்த போது, காரியங்களை செய்த புரோகிதர் தனுஜா போல பேசி, தனக்கு ஈம காரியங்கள் செய்ய வேண்டாம், எனவும் மூன்று ஆண்டுகளில் நான் தெய்வமாக வீட்டிற்கே வருவேன், எனவும் அருள்வாக்கு கூறியுள்ளார். இதே போல், மூன்றாண்டுகளுக்கு பின், பழனிச்சாமியின் தம்பி பாலு, சிறுமி தனுஜா போல பேசி, தனக்கு கோவில் கட்டி, பால்குடம் எடுத்து பூக்குழி இறங்க வேண்டும் என, அருள் வந்து கூறியுள்ளார்.

அதன் பின், தனுஜாவின் பெற்றோர், உறவினர்கள் ஒன்று சேர்ந்து பழனிச்சாமி வீடு அருகே, தனுஜாவிற்கு ஒரு அடி உயர சிலை எழுப்பி, கோவில் கட்டியுள்ளனர். இக்கோவிலில், ஆண்டு தோறும் சித்திரை மாதம் பால்குடம் மற்றும் பூக்குழி இறங்கும் விழா நடந்து வருகிறது. இந்த ஆண்டு பால் குடம் ஊர்வலம் நேற்று காலை, 10 மணிக்கு, வெள்ளையம்மாபட்டி மூக்கரை பிள்ளையார் கோவிலில் இருந்து புறப்பட்டது. பின், பால் குடம் எடுத்து வந்தவர்கள், கோவில் முன் பூக்குழி இறங்கி, தனுஜாவின் சிலைக்கு பாலாபிஷேகம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் வெள்ளையம்மாபட்டி, பின்னத்தூர், பன்னாங்கொம்பு, பலவாரப்பட்டி, கலிங்கப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !