தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை!
ஆத்தூர்: ஆத்தூர் பிரித்தியங்கிரா தேவி கோவிலில், தேய்பிறை அஷ்டமியொட்டி சிறப்பு பூஜை நடந்தது.
ஆத்தூர் கைலாசநாதர் கோவிலில், நேற்று, தேய்பிறை அஷ்டமியொட்டி, பிரித்தியங்கிரா தேவி மற்றும் சொர்ண பைரவருக்கு, சிறப்பு அபிஷேக, யாக பூஜைகள் நடந்தது. பின், மதியம் 2 மணியளவில், பிரித்தியங்கிரா தேவி அம்மன், வெள்ளி கவசம், பச்சை சேலை, புஷ்ப அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அதேபோல், தலைவாசல் அருகே, ஆறகளூர் காமநாதீஸ்வரர் கோவிலில், நேற்று, உன்மத்தர், ருருவர், குரோதானர், சண்டர், பீஷ்ணர், காலசம்ஹாரர், காலபைரவர் உள்பட எட்டு பைரவர்களுக்கு, சிறப்பு அபிஷேக பூஜைகள் நடந்தது.
பின், மாலை 5 மணியளவில், கால பைரவர் ஸ்வாமி, வெள்ளி கவசம் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதில், சேலம், விழுப்புரம், ஈரோடு, கடலூர், திருச்சி உள்பட பல்வேறு ஊர்களில் இருந்து, பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். அதேபோல், ஆத்தூர் காயநிர்மலேஸ்வரர், தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர் உள்ளிட்ட சிவன் கோவில்களில், சிறப்பு பூஜைகள் நடந்தது.