கர்நாடகா சிவனடியார்கள் நாம பாராயணம்!
சிதம்பரம்: சிதம்பரத்தில் உலக நன்மை வேண்டி, கர்நாடகா மாநில சிவனடியார்கள் சாம்ப சிதம்பர அகண்ட நாம பாராயணம் சிறப்பு வழிபாடு நடத்துகின்றனர். கர்நாடகா மாநிலம் கொப்பலு மாவட்டம், கர்கி கிராமத்தைச் சேர்ந்த சிவனடியார் சந்த் மகராஜ் சுரேஷ் பாட்டீல், தனது 300 பக்தர்களுடன் சிதம்பரத்தில் நடராஜரை தரிசனம் செய்ய நேற்று வருகை தந்தார். இவர்களை நடராஜர் கோவில் பூஜகர் வெங்கடேச தீட்சிதர் வரவேற்றார். பின்னர் கர்நாடகா சிவனடியார்கள் கோவிலில் தரிசனம் செய்தனர். தொடர்ந்து, கிழக்கு சன்னதியில் இருந்து ஊர்வலமாக தெற்கு வீதி 63 நாயன்மார்கள் மடத்திற்குச் சென்றனர். அங்கு சிவனடியார்களின் சிதம்பர அகண்ட நாம பாராயணம் செய்ய சிறப்பு பூஜை நடந்தது. இதனைத் தொடர்ந்து சிவனடியார்கள் அமர்ந்து 24 மணி நேரமும் அகண்ட நாம பாராயணம் செய்கின்றனர். இந்த நிகழ்ச்சி தொடர்ந்து 7 நாட்கள் நடக்கிறது.