பழநி கிரிவீதியில் மூலிகை காற்று தரும் கடம்பமரத்திற்கு ஆபத்து!
பழநி: பழநி மலைக்கோயில் கிரிவிதியிலுள்ள கடம்பமரத்து கிளைகளை சிலர் வெட்டுவதால் மரத்தின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை பின் எழு, வைகாசி முன் எழு நாட்களில் அக்கினி நட்சத்திரம் விழா, பழநியில் சிறப்பாக கொண்டாடப்படும். இவ்வாண்டு அக்னி நட்சத்திரம் மே 8ல் துவங்கியுள்ளது. இந்த நாட்களில் பழநி மலைக்கோயில் கிரிவீதியில் பூத்துக்குலுங்கும் கடம்ப மரப்பூக்களிலிருந்து சஞ்சீவி மூலிகை காற்று வீசுவதாகவும், அந்த வாசனையை நுகர்ந்தால் வயிற்றுவலி, உஷ்ணநோய் உட்பட வெப்ப வியாதிகள் குணமாகும் என்ற நம்பிக்கை உள்ளது. பெண்கள் கடம்ப மரப்பூக்களை தலையில் சூடி அதிகாலை நேரம், மாலை நேரங்களில் சஞ்சீவி மூலிகை காற்றை அனுபவிக்க மலைக் கோயிலை கிரிவலம் வருவர். விழா நிறைவு நாளான மே 21ல் மலைக்கோயில் அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம் நடக்கிறது. மரங்களுக்கு ஆபத்து: பழநி மலைக்கோயில் தெற்குகிரிவீதியில் உள்ள கடம்ப மரங்களில் பூக்கள் பூத்துகுலுங்குகிறது. அதை பறித்து விற்பனை செய்வதற்காக சிலர் அத்துமீறி மரத்தின்மீது ஏறி பூக்களை பறிக்காமல் ஒரேஅடியாக கிளைகளை வெட்டுகின்றனர். இதனால் வரும்காலங்களில் மரத்தின் வளர்ச்சி பாதிக்கும். பல ஆண்டுகள் பழமையான மரங்கள் அழியவாய்ப்பு உள்ளதால் அத்துமீறி மரக்கிளை வெட்டுபவர் மீது பழநிகோயில்நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.