திருத்தணி திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா
திருத்தணி: திரவுபதியம்மன் கோவிலில், நேற்று நடந்த தீமிதி திருவிழாவில், 1,000 பக்தர்கள் காப்புக்கட்டி தீ மிதித்தனர். திருத்தணி ஒன்றியம், எஸ்.அக்ரஹாரம் கிராமத்தில் உள்ள, திரவுபதியம்மன் கோவிலில், தீமிதி திருவிழா, கடந்த மாதம், 30ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி மூலவர் அம்மனுக்கு, சந்தனக்காப்பு மற்றும் தீபாராதனை நடந்தது. மதியம் 2:00 மணி முதல், மாலை 5:00 மணி வரை மகாபாரத சொற்பொழிவும், இரவு 10:00 மணிக்கு, மகாபாரத நாடகமும் நடைபெற்றது. விழாவின் நிறைவு நாளான நேற்று, நண்பகல், 11:00 மணிக்கு, துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து கூழ் வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. திரளான கிராம பெண்கள், கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து, அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். மாலை 6:30 மணிக்கு, அக்னி குண்டத்தில், 1,000 பக்தர்கள் காப்புக்கட்டி விரதம் இருந்து தீ மிதித்தனர். பின்னர், சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் அம்மன், வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், 5,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். இன்று காலை 11:00 மணிக்கு, தருமர் பட்டாபிஷேகம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.