உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சங்கமேஸ்வரர் கோவிலில் ஸ்ரீமஹா ருத்ர யாகம்!

சங்கமேஸ்வரர் கோவிலில் ஸ்ரீமஹா ருத்ர யாகம்!

பவானி: பவானி கூடுதுறை, வேதநாயகி உடனமர் சங்கமேஸ்வரருக்கு ஸ்ரீமஹா ருத்ர யாகம், நேற்று துவங்கி நாளை வரை மூன்று நாட்கள் நடக்கிறது.

பராசரர், இந்திரன், குபேரன், சூரியன் ஆகியோர் பூஜித்த பெருமை பெற்ற ஸ்தலம், பவானி சங்கமேஸ்வரர் கோவில். இக்கோவில் கும்பாபிஷேக ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, 1,331 ருத்ர மந்திரங்களையும், 121 சமகங்களையும், 121 ஆவர்த்தி ஹோமங்களையும் உள்ளடக்கிய, ஸ்ரீமஹா ருத்ர யாகம், மூன்று நாட்கள் நடக்கிறது. நேற்று காலை, 6 மணிக்கு மங்கள இசை, மஹா கணபதி பூஜை, ஸ்ரீமஹா ருத்ர யாக அனுக்ஞை பூஜை, கோ பூஜை, தீபாராதனை நடந்தது. மாலையில் முதற்கால ஸ்ரீமஷா ருத்ர பாராயணம் அக்னி கார்யம், மூலமந்திர ஹோமம், மஹா தீபாராதனை துவங்கியது.

இன்று காலை, 5.30 மணிக்கு, இரண்டு மற்றும் மூன்றாம் கால யாகபூஜைகள் நடக்கிறது. நாளை காலை, 5 மணிக்கு, நான்காம் கால யாகபூஜை, ஸ்ரீமஹா ருத்ர, 11 ஆசார்யம், 11 முறை ஹோமம், தனித்தனி பூர்ணாஹுதி நடைபெற்று, ஸ்ரீமஹா ருத்ர கலசாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்த யாகத்தை மயிலாடுதுறை சபேஷ சிவாச்சாரியார், ஸ்வாமிநாத சிவாச்சாரியார், காஞ்சிபுரம் ராஜப்பா சிவாச்சாரியார், காரைக்கால் சர்வேஸ்வர குருக்கள், பழனி பாலசுப்பரமணிய சிவாச்சாரியார், சென்னை அருணசுந்தர குருக்கள் ஆகியோர் முன்னிலையில், கொங்கு ஏழு ஸ்தலங்களின் பிரதான ஆச்சாரியார்கள், பவானி சங்கமேஸ்வரர் கோவில் சிவாச்சாரியார்கள் முன்னின்று நடத்துகின்றனர்.

ஏற்பாடுகளை, ஈரோடு மாவட்ட பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் பழனிசாமி, அக்னி ராஜா, வாசுதேவன், ரவி, சௌண்டப்பன், சங்கமேஸ்வரன், மகேந்திரன், கோவில் உதவி ஆணையர் ராஜா, பண்ணாரி மாரியம்மன் கோவில் தக்கார் மாரிமுத்து உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !