உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தவறு செய்து விட்டாயா...! தைரியத்துடன் தண்டனையை ஏற்றுக்கொள்!

தவறு செய்து விட்டாயா...! தைரியத்துடன் தண்டனையை ஏற்றுக்கொள்!

தவறு வெளிப்பட்டால் தண்டனை கிடைக்குமே என்று கலங்க வேண்டாம். தைரியமுடன் தண்டனையை ஏற்றுக் கொண்டால் மீண்டும் தவறு செய்யாத மனப்பக்குவம் உண்டாகும். தவறு நேரும் போது பொய் சொல்லத் தேவையில்லை. யாருக்கும் தெரியாமல் மூடி மறைப்பதும் கூடாது. உள்ளத்தைக் கெடுக்கும் பயங்கரமான வியாதியே பொய். உன்னையன்றி வேறு கதியில்லை. எனக்கு நல்ல புத்தி கொடு என்று குழந்தை உள்ளத்துடன் கடவுளின் திருவடியில் தினமும் வழிபடுங்கள். உலகம் ஒரு பெரிய குடும்பம். அம்மையும், அப்பனுமான சிவ பார்வதியே இதன் பெற்றோர். நம் பெற்றோர் மீது அன்பு செலுத்துவது போல, அம்மையப்பர் மீதும் பக்தி செலுத்துவது நம் கடமை.அறியாமை என்னும் வியாதி கல்வியால் நீங்குகிறது. மனதிலுள்ள தீய குணம் அகல, படிப்பு மட்டும் போதாது. ஒழுக்கம், பணிவு, நேர்மை, நற்குணம் இருந்தால் மட்டுமே தீய குணம் மறையும். உடல், உடை இரண்டிலும் துõய்மை காப்பதோடு, உள்ளத் துõய்மையையும் பேண வேண்டும். வெளித்துõய்மையை விட மனத்துõய்மையே முக்கியமானது. தவறு, தப்பு இரண்டினாலும் மனதில் அழுக்கு உண்டாகிறது. நாம் செய்யும் செயல்களில் தவறு நேரக் கூடாது. அதாவது, கெட்ட நோக்கத்துடன் எந்தச் செயலிலும் ஈடுபடுவது கூடாது.என்னால் தான் எல்லாம் நடக்கிறது என்று கர்வப்படக் கூடாது. கடவுளின் அருள் இருந்தால் வாழ்வில் எதையும் சாதிக்க முடியும் என்ற உண்மையை எப்போதும் நினைக்க வேண்டும்.மற்றவர்களை விட, நல்லவனாக இருப்பதில் மட்டுமே போட்டி போடலாம். மற்றபடி பணம், பதவி இவற்றுக்காக போட்டி, பொறாமை கொள்வது கூடாது. ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பர். தினமும் ஐந்து நிமிடமாவது தனிமையில் அமர்ந்து கடவுளை வழிபாடு செய்ய குழந்தைகளைப் பழக்குவது பெற்றோர் கடமை. ஒவ்வொன்றும் இப்படி தான் இருக்க வேண்டும் என்ற ஒழுங்குடன், இயற்கை இயங்குகிறது. நாமும் வாழ்வில் ஒழுக்கமாக நடக்க கற்றுக் கொள்ள வேண்டும்.நல்லவன் என்று பெயர் வாங்குவது கடினம் என்று தோன்றலாம். ஆனால்,  கடவுளைச் சரணடைந்துவிட்டால் இதை எளிதில் சாதிக்க முடியும்.நிழல், கனிகளைத் தரும் மரம் போல மனிதன் நல்ல நிலைக்கு உயர்வதோடு, தன்னை நாடி வருவோருக்கு உதவி செய்பவனாகவும் இருக்க வேண்டும். ஏழைகள், நோயாளிகள், ஆதரவற்றோர் ஆகியோர் கடவுளின் குழந்தைகளே. அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்தால் கடவுளின் உள்ளம் குளிரும். (மகான் காஞ்சிப் பெரியவர்)


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !