அரங்கநாத பெருமாள் கோவில் திருத்தேர் திருவிழா!
திட்டக்குடி: திட்டக்குடி வதிட்டபுரம் அரங்கநாத பெருமாள் கோவில் தேர் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். திட்டக்குடி வதிட்டபுரம் திருமகிழ்ந்தவல்லி சமேத அரங்கநாதபெருமாள் கோவில் திருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் பெருமாள் மற்றும் தாயாருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அரு ள்பாலித்தனர். கடந்த 31ம் தேதி மாலை தேர் திருவிழாவையொட்டி பெருமாள் மற்றும் தாயாருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து தேரில் அமர்த்தினர். தொடர்ந்து மாலை 5:00 மணிக்கு பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். தேர் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்தது. வைணவ செம்மல் வரதசிங்காச்சாரியார் சுவாமிகள் தலைமையில் கோவில் பட்டாச்சாரியார்கள் ராகவன், சுதாகரன் உள்ளிட்டோர் விழாவை நடத்தினர். நிகழ்ச்சியில் அருண்மொழித்தேவன் எம்.பி., உபயதாரர்கள் சரோஜா வரதாச்சாரியார் குடும்பத்தினர், தொழிலதிபர் சிவசங்கரன், கூட்டுறவு வங்கித் தலைவர்கள் முல்லைநாதன், முத்தழகன், கிராம முக்கியஸ்தர்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் விழாவில் பங்கேற்றனர்.