உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி மலைக்கோயிலில் நவீன தொழில்நுட்ப வடிவமைப்பில் 2வது ரோப்கார்!

பழநி மலைக்கோயிலில் நவீன தொழில்நுட்ப வடிவமைப்பில் 2வது ரோப்கார்!

பழநி: பழநி மலைக்கோயிலில் 2வது ரோப்கார் வெளிநாட்டு நவீன தொழில் நுட்பத்தில் அமைப்பதற்கான டெண்டர் விதிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. பழநிமலைகோயிலுக்கு பக்தர்கள் எளிதாக செல்ல வின்ச்-கள், ரோப்கார் உள்ளது. முதல் ரோப்கார் 2004 நவம்பர் முதல் இயக்கப்படுகிறது. இதற்கு பக்தர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. இதனால் இரண்டாம் ரோப்காரை ரூ.20 கோடி செலவில் நிறுவ முடிவுசெய்துள்ளனர். இது ஒரு மணி நேரத்தில் 800 பக்தர்கள் செல்லும் வகையில் வெளிநாட்டு நவீன தொழிநுட்பத்துடன் அமைக்கப்பட உள்ளது. இதற்காக மின்வாரிய தலைமை பொறியாளர், பழநி கோயில் இணை ஆணையர், நிர்வாக பொறியாளர், ரோப்கார் நிபுணர், திண்டுக்கல் மாவட்ட மின் ஆய்வாளர் உள்ளிட்ட 11 பேர் கொண்ட ரோப்கார் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.

இக்கமிட்டியின் ஆலோசனையின் பேரில் இரண்டாவது ரோப்காருக்கான உலகளாவிய (குளோபல்) டெண்டர் கோரப்பட்டு, பிரான்ஸ், ஆஸ்திரியா போன்ற வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.  2வது ரோப்கார் டெண்டர் விதிமுறைகள் மற்றும் வடிவமைப்பு முறை குறித்து நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் கமிட்டி உறுப்பினர்கள் இந்துசமய அறநிலைத்துறை தலைமைபொறியாளர் பாலசுப்ரமணியன், பழநிகோயில் இணை ஆணையர்(பொ) ராஜமாணிக்கம், சென்னை ஐ.ஐ.டி., பேராசிரியர் சுந்தர்ராஜன், அண்ணாபல்கலை பேராசிரியர் கருணாமூர்த்தி மற்றும் இந்தியா, மற்றும் வெளி நாட்டை சேர்ந்த ரோப்வே நிறுவன ஏஜென்ட்கள் கலந்துகொண்டனர். அவர்களிடம் 2வதுரோப்கார் எவ்விதம் அமைக்கவேண்டும், அதன் செலவுவிபரம் மற்றும் டெண்டர் விதிமுறைகள் குறித்து கமிட்டியினர் விளக்கமளித்தனர். கோயில் அதிகாரி ஒருவர் கூறுகையில், 2வது ரோப்கார் டெண்டர் விண்ணப்பித்துள்ள நிறுவனங்களின் சந்தேகங்களை விளக்குவதற்காக விதிமுறை ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த கோமா நிறுவன ஏஜென்ட் கலந்துகொண்டார். விரைவில் அனுபவம் வாய்ந்த நிறுவனத்திற்கு டெண்டர் விடப்படும். தற்போதைய ரோப்காரில் பராமரிப்பு பணிகள் வேகமாக நடக்கிறது. 10 நாட்களில் பக்தர்கள் பயன்பாட்டிற்காக இயக்கப்பட உள்ளது,என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !