உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அரங்கநாதர் கோவிலில் 7.6.15 ம்தேதி கும்பாபிஷேகம்!

அரங்கநாதர் கோவிலில் 7.6.15 ம்தேதி கும்பாபிஷேகம்!

மேட்டுப்பாளையம் :காரமடை அரங்கநாதர் கோவிலில் மகாகும்பாபிஷேகத்தை முன்னிட்டு, எட்டு கோபுரங்களில், 16 கலசங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.காரமடை அரங்கநாதர் கோவில் மகாகும்பாபிஷேகம், 7.6.15ம்தேதி காலை, 9:15ல் இருந்து, 9:45 மணிக்குள் நடக்கிறது. விழாவின் மூன்றாம் நாளான 5.6.15 அன்று காலை, 8:00 மணிக்கு சதுஸ்தான பூஜை நடந்தது.இதில் நாலாயிர திவ்ய பிரபந்த பாராயணம், வேதபாராயணம் வாசிக்கப்பட்டது.

பின், கும்ப ஆவாஹணம், த்வார, கும்ப, மண்டல, அக்னி பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, வாஸ்து பூஜையும், வாஸ்து ஹோமமும், இரண்டாம் கால யாக பூஜையும் நடந்தன.கோவிலில் ராஜகோபுரம், சொர்க்க வாசல் மற்றும் மூலவர், ஆண்டாள், தாயார் சன்னதிகள், வாசுதேவர், ராமானுஜர், ஆஞ்சநேயர் சுவாமிகளுக்கு என, எட்டு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.கோபுரத்திற்கு கலசங்கள் எடுத்துச் சென்று, அமைக்கும் பணிகள் மாலையில் நடந்தன.

ராஜகோபுரத்தில், ஏழு கலசங்கள், சொர்க்க வாசல் கோபுரத்தில் மூன்று கலசங்கள், மீதமுள்ள கோவில்களில் தலா ஒன்று வீதம், மொத்தம் எட்டு கோபுரங்களில், 16 கலசங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.இரவு மூன்றாம் கால யாக பூஜை நடந்தது. பின், பூர்ணாஹுதியும், சாற்றுமுறையும் நடந்தது. இந்த நிகழ்ச்சியில், 30க்கும் மேற்பட்ட அர்ச்சகர்கள் பங்கேற்றனர்.மகாகும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, பெட்டத்தம்மன் (அரங்கநாயகி தாயார்) கோவிலில், புதிய மலைப்பாதையில், படிபூஜை மற்றும் அரங்நாதருக்கு சீர்வரிசை சமர்ப்பிக்கும் விழா நடந்தது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை, தக்கார் மற்றும் உதவி ஆணையர் ஜீவானந்தம், செயல் அலுவலர் நந்தகுமார், கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !