பத்மநாப சுவாமி கோவில் ஆறாவது அறையில் இருப்பது என்ன?!
புதுடில்லி: கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில், பிரசித்திப் பெற்ற பத்மநாப சுவாமி கோவில் உள்ளது. இதை, திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் நிர்வகித்து வருகின்றனர். இக்கோவிலில், பாதாள அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள தங்க, வைர, வெள்ளிப் பொருட்கள் குறித்து கணக்கெடுத்து அறிக்கை அளிக்க, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.இதற்காக, ஏழு பேர் கொண்ட கமிட்டியையும் நியமித்துள்ளது. அந்த கமிட்டியினர், கோவிலில், கடந்த, 27ம் தேதி முதல் பாதாள அறைகளை திறந்து கணக்கெடுத்து வருகின்றனர். ஐந்து அறைகளை திறந்து அங்கிருந்த பொருட்களை கணக்கெடுத்து வரும் அந்த கமிட்டியால், ஆறாவது (பி அறை) அறையை திறக்க முடியவில்லை. அவ்வறையை நாளை திறக்க ஆலோசனை நடக்கிறது. மற்ற அறைகளில் இருந்ததை விட, ஆறாவது அறையில் அதிக அளவு பொக்கிஷங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தின் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், பத்மநாப சுவாமி கோவிலில் கணக்கெடுக்கப்பட்டு வரும் சொத்துக்கள் பற்றிய விவரங்களை வெளியிட தடை விதிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தது.இம்மனு, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ஆர்.வி.ரவீந்திரன் மற்றும் ஏ.கே.பட்நாயக் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள் கூறியதாவது: பத்மநாப சுவாமி கோவிலில் நடக்கும் கணக்கெடுப்பு விவரங்களை வெளியிடக்கூடாது. கணக்கெடுப்பில் ஈடுபட்டுள்ள உறுப்பினர்கள் இதுகுறித்து எந்தவொரு தகவலையும் வெளியிடக் கூடாது. பொக்கிஷங்கள் குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ படங்கள் எடுக்கலாம்.இதற்காக, தேசிய அருங்காட்சியகம் மற்றும் தொல்லியல் துறை நிபுணர்கள் உதவியை நாடலாம். கணக்கெடுப்பின்போது, திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த மன்னரோ அவருக்கு முடியாத பட்சத்தில் அவரது பிரதிநிதியோ கலந்து கொள்ள எந்த தடையும் இல்லை. சுப்ரீம் கோர்ட் நியமித்த கமிட்டியில் இடம் பெற்ற நீதிபதி, பொக்கிஷ விவரங்களை வெளியிட்டதற்கு சுப்ரீம் கோர்ட் தன் அதிருப்தியை தெரிவிக்கிறது.இவ்வாறு, நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
கோவிலுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு: பாதாள அறைகளில் விலை மதிக்க முடியாத பொருட்கள் உள்ளதால், சிறப்பு பயிற்சி பெற்ற, 24 பேர் கொண்ட கமாண்டோக்கள், அதிவிரைவு படையைச் சேர்ந்த, 24 பேர் என, 48 பேர் கொண்ட குழு, நேற்று முன்தினம் மாலை, கோவிலில் பாதுகாப்பு பணியை மேற்கொண்டது.இவர்கள், 12 பேர் கொண்ட நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு வாயிலையும் தனித்தனியே கண்காணித்து வருகின்றனர். இவர்களிடம், அதிநவீன ஏ.கே.47 ரக துப்பாக்கி போன்ற அதிநவீன ஆயுதங்கள் வழங்கப்பட்டுள்ளன.கமாண்டோக்கள் தவிர, நகர போலீஸ் துறையைச் சேர்ந்த, 160 போலீசாரும் கோவிலிலுக்கு உள்ளேயும், வெளியேயும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களை தவிர, கோவிலைச் சுற்றிலும், ஐம்பதுக்கும் மேற்பட்ட போலீசார், மாறுவேடத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.வருங்காலங்களில், கோவிலில் நிரந்தரமாக பாதுகாப்பு பணிக்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, மாநில போலீசார், உள்துறை அமைச்சகத்திடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.