பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதிக்காக சபரிமலையில் புதிய குடிநீர் தொட்டி
சபரிமலை : பக்தர்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்படாமல் இருக்க எரிமேலியில் தடுப்பணை அமைக்கவும், சபரிமலையில் நான்கு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வரும் மண்டல, மகரஜோதி உற்சவ காலங்களில் பக்தர்களுக்கு சபரிமலை, பம்பை, நிலக்கல், எரிமேலி பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது. கேரள மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு கேரளா மட்டுமன்றி, நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் கோடிக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதில் அதிகளவு பக்தர்கள் ஒவ்வொரு ஆண்டும் மண்டல, மகர ஜோதி உற்சவத்தின்போது தான் தரிசனம் செய்ய வருகின்றனர். இதனால், சபரிமலை, எரிமேலி, பம்பை மற்றும் நிலக்கல் ஆகிய இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதை தவிர்க்க, திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குடிநீர் தட்டுப்பாடு உட்பட பல்வேறு பிரச்னைகள் குறித்து மாநில தேவஸ்வம் போர்டு அமைச்சர் வி.எஸ்.சிவக்குமார் தேவஸ்வம் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில், "இவ்வாண்டு நடைபெற உள்ள மண்டல மற்றும் மகரஜோதி உற்சவ காலத்தின்போது சபரிமலையில் தற்போதுள்ள குடிநீர் குழாய்களை மாற்றி, புதிய குழாய்கள் அமைக்கப்படும். எரிமேலி குடிநீர் வினியோக திட்டம் செயல்படுத்தப்படும். நிலக்கல் பகுதியில் மழை நீர் சேகரிப்பு திட்டம் அமைக்கப்படும். பம்பை பகுதியில் தடுப்பணைகள் மற்றும் குளியலறைகளில் உள்ள குறைகள் நிவர்த்தி செய்யப்படும்.எரிமேலியில் புதிய தடுப்பணை அமைப்பதற்கான மதிப்பீட்டு தொகை தயாரிக்கப்படும். சபரிமலையில், நான்கு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய நீர்த்தேக்கத் தொட்டி நிர்மாண பணிகள் முடிந்து விட்டது என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இத்திட்டங்கள் அனைத்தும் வரும் சீசன் காலத்திற்குள் முடிக்கப்பட்டால், எரிமேலி, பம்பை, நிலக்கல், சபரிமலை பகுதிகளில் செல்லும் பக்தர்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பிருக்காது என தேவஸ்வம் அமைச்சர் சிவக்குமார் தெரிவித்தார்.