கோவை கோவில்களில் குருப்பெயர்ச்சி வேள்வி!
கோவை : குருப்பெயர்ச்சியையொட்டி, நேற்று கோவையில் சிவன் மற்றும் முருகன் கோவில்களில் சிறப்பு வேள்விகள் நடந்தது. உலக இயக்கத்தை சிவனின் அருளால், நவதேவர்கள், சுழற்சி முறையில் ஒவ்வொரு உயிரினங்கள் மீதும், பார்வை செலுத்தி ஆட்சி செய்து அருள்பாலிக்கின்றனர் என்பது நம்பிக்கை. ஒவ்வொருவரின் ஆன்மிக பலத்துக்கு ஏற்ப நன்மையும், தீமையும் கிடைக்கிறது. தீமையிலிருந்து விடுபட, நவக்கிரஹ வழிபாடு செய்வது சிறந்தது. வரதராஜபுரம் சர்க்கரை செட்டியார் நகர், சித்திவிநாயகர், தையல்நாயகி உடனமர் வைத்தீஸ்வரர் கோவிலில், நேற்று நள்ளிரவு, குருப்பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு வேள்வி நடந்தது. நேற்று நள்ளிரவு 11:05 மணிக்கு குருபகவான், கடகராசியிலிருந்து, சிம்மராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். இதற்காக சிவாலயங்களிலும், முருகன் கோவிலிலும் குரு பகவானுக்கு லட்சார்ச்சனை நடந்தது. காலை 9:00 மணிக்கு, யாகபூஜைகளும், பரிகாரவேள்விகளும், தட்சிணாமூர்த்திக்கு நடைந்தது. அபிஷேக ஆராதனைகளும், அலங்கார பூஜைகளும் அனந்தலிங்க திவான் சுவாமிகள் முன்னிலையில் நடந்தது. குருப்பெயர்ச்சியால், கடகம், துலாம், தனுசு, கும்பம், மேஷம் ஆகியவை நன்மையடைகின்றன. கன்னி, மீனம், ரிஷபம், மிதுனம், சிம்மம், விருச்சிகம், மகரம் ஆகிய ராசிக்காரர்கள் பரிகாரம் செய்து, நற்பலன்களை பெறலாம். கோவையில் பேரூர், கோட்டை ஈஸ்வரன், பேட்டை ஈஸ்வரன், காந்திபார்க்முருகன் கோவில், ராம்நகர் கோதண்டராமர் கோவில் உள்ளிட்ட ஏராளமான கோவில்களில் நேற்று சிறப்பு வேள்விகள் மற்றும் பூஜைகள் நடந்தன. இதற்கான விரிவான ஏற்பாடுகளை, அறநிலையத்துறை செய்திருந்தது.