வில்வநாதீஸ்வரர் கோவில் நந்திகேஸ்வரர் மீது கல் தூண் சரிந்தது!
திருவண்ணாமலை: வேலூர் அடுத்த, திருவலம் வில்வநாதீஸ்வரர் கோவிலில், நந்திகேஸ்வரர் சிலை மீது, கல் தூண் சரிந்து விழுந்ததால், அதிர்ச்சியடைந்த பக்தர்கள் பரிகார பூஜை செய்தனர். தட்சண் யாகம் நடத்திய இடமாகவும், விநாயகர் தாய், தந்தையை உலகமாக கருதி, வலம் வந்து ஞானப்பழத்தை பெற்ற இடமாகவும் கருதப்படும், திருவலம், தனுமத்யாம்பாள் சமேத வில்வநாதீஸ்வரர் கோவில், வேலூர் அருகே, 15 கி.மீ., தொலைவில் உள்ளது. பிரசித்தி பெற்ற மிகவும் பழமை வாய்ந்த இக்கோவிலில், எங்கும் இல்லாத வகையில் நந்தி பகவான், மூலவரை நோக்காமல், கிழக்கு நோக்கி மிக பிரம்மாண்டமாய் அமைந்திருப்பது சிறப்பாகும். நந்திகேஸ்வரருக்கு முன் கொடி மரமும், பலிபீடமும் அமைந்துள்ளது. இந்நிலையில், நந்திகேஸ்வரரின் அருகில், மண்டபத்தில் விதானத்தை தாங்கி நிற்கும் கல் தூண்களில், ஒன்று நேற்று அதிகாலை, நந்தி பகவான் மீது சரிந்து விழுந்தது. கோவில் நடையை திறக்க வந்த அர்ச்சகர்கள் இதை கண்டு, அதிர்ச்சி அடைந்தனர். அர்ச்சகர்கள் கொடுத்த தகவலின் படி, ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கோவிலுக்கு வந்தனர். இத்தகவல் பரவியதால், அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் கோவிலில் திரண்டனர். பக்தர்கள் ஒன்று சேர்ந்து, நந்திபகவான் மீது விழுந்திருந்த கல்தூணை பத்திரமாக அப்புறப்படுத்தியதுடன், பரிகார பூஜை செய்தனர். நந்திபகவான் சிலை மீது கல்தூண் மீது விழுந்தும், எந்தவித சேதமும் ஏற்படாததால், பக்தர்கள் நிம்மதி அடைந்தனர்.