உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அம்பரீஷ சரிதம்

அம்பரீஷ சரிதம்

1. வைவஸ்வதாக்ய மநுபுத்ர நபாக ஜாத
நாபாகநாமக நரேந்த்ர ஸுத: அம்பரீஷ:
ஸப்தார்ணவாவ்ருத மஹீதயித: அபி ரேமே
த்வத் ஸங்கிஷு த்வயி ச மக்ந மனா: ஸதைவே

பொருள்: குருவாயூரப்பனே! வைவஸ்வத மனுவின் மகன் நபாகன்; நபாகனின் மகன் நாபாகன்; நாபாகனின் மகன் அம்பரீஷ் ஆவான். ஏழு கடல்கள் சூழ்ந்து உள்ள பூமிக்கு அரசனாக அவன் இருந்தான். உன்னிடமும் உனது அடியார்களிடமும் மிகுந்த பக்தி வைத்திருந்தான்.

2. த்வத் ப்ரீதயே ஸகலமேவ விதந்வத: அஸ்ய
பக்த்யைவ தேவ நசிராத் அப்ருதா: ப்ராஸதம்
யேந அஸ்ய யாசநம் ருதேபி அபிரக்ஷணார்த்தம்
சக்ரம் பவாந் ப்ரவிததார ஸஹஸ்ரதாரம்

பொருள்: குருவாயூரப்பா! அம்பரீஷ் தனது எந்தச் செயலையுமே உனது மகிழ்வுக்காகச் செய்து வந்தான். இத்தகைய பக்தியை மெச்சிய நீ சீக்கிரமாவே அவனுக்கு அருள் புரிந்தாய். அவன் உன்னிடம் எதுவும் கேட்காமல் இருந்தபோது நீயாகவே, உனது ஆயுதமான, ஆயிரக்கணக்கான கூர்மையான முனைகள் உடைய சக்கரத்தை, அவனுக்குத் துணையாக அளித்தாய்.

3. ஸ த்வாதசீ வ்ரதம் அத: பவதர்ச்சநார்த்தம்
வர்ஷம் ததௌ மதுவநே யமுனோ பகுண்ட்டே
பத்ந்யா ஸமம் ஸுமனஸா மஹதீம விதந்வந்
பூஜாம் த்விஜேஷு விஸ்ருஜந் பசுஷஷ்டி கோடிம்

பொருள்: குருவாயூரப்பா! அந்த அம்பரீஷன் யமுனை நதியான கரையில் உள்ள மதுவனத்தில், நல்ல உள்ளம், கொண்ட தனது மனைவியுடன் இணைந்து மிகவும் பெரிய பூஜை செய்தான். அங்கு ப்ராமணர்களுக்கு அறுபது கோடி பசுக்களைத் தானமாக அளித்தான். தொடர்ந்து உன்னைப் பூஜிப்பதற்கு எண்ணி, ஒரு வருடம் த்வாதசி வ்ரதம் மேற்கொண்டனர்.

4. தத்ர: அத பாரணதினே பவதர்ச நாந்தே
துர்வாஸஸா அஸ்ய முனினா பவனம் ப்ரபேதே
போக்தும் வ்ருதச்ச ஸ ந்ருபணே பரார்த்திசீல:
மந்தம் ஜகாம யமுனாம் நியமான் விதாஸ்யன்

பொருள்: குருவாயூரப்பனே! அதன் பின்னர் அந்த இடத்தில் பாரணை (உணவு உட்கொள்ளும் நேரம்) நாள் வந்தது. அன்று உன்னைத் துதித்து விரதத்தை முடித்தான். அந்தப் பூஜையின் முடிவில் துர்வாஸ முனிவர் அங்கு வந்து சேர்ந்தார். பிறருக்குத் துன்பம் கொடுத்து அதில் சுகம் காண்பதைத் தனது இயல்பாக உடையவர் துர்வாஸர். அரசன் அவரை பாரணைக்கு அழைத்தான். அப்போது அவர் தனது அன்றாடக் கடமைகளை முடிப்பதற்காக மெதுவாக நடந்து யமுனைக்குச் சென்றார்.

5. ராக்ஞாத பாரண முஹுர்த்த ஸமாப்தி கேதாத்
வானரவ பாரணம் அகாரி பவத் பரேண
ப்ராப்தோ முநி: தத் திவ்ய த்ருசா விஜாநந்
க்ஷிப்யந் க்ருதா உத்ருத ஜட: விததாந க்ருத்யாம்

பொருள்; குருவாயூரப்பா! பாரணை செய்வதற்கான நேரம் தவறிவிடும் என்பதால் வருத்தத்துடன் அம்பரீஷன் தண்ணீரை மட்டுமே குடித்து பாரணையை பூர்த்தியாக்கினான். அதன் பின்னர் அங்கு வந்த துர்வாஸர் தனது ஞான த்ருஷ்டியால் நடந்ததை உணர்ந்தார். அரசனை கடும் சொற்களால் கோபித்தார். தனது சடாமுடியை அவிழ்த்து விட்டு, ஒரு பூதத்தை உருவாக்கினார்.

6. க்ருத்யாம் ச தாம் அஸிதாராம் புவனம் தஹந்தீம்
அக்ரே அபிவீக்ஷ்ய ந்ருபதி: ந பதாத் ச கம்பே
த்வத் பக்தபாதம் அபி வீக்ஷ்ய ஸுதர்சனம் தே
க்ருத்யானலம் சலபயந் முனிம் அன்வதாவீத்

பொருள்: குருவாயூரப்பா! கைகளில் கத்தியை வைத்துக் கொண்டும், தனது பார்வையால் உலகத்தை எரிப்பதும் ஆகிய அந்த பூதத்தைக் கண்ட அம்பரீஷன் தான் நின்ற இடத்தை விட்டு பயந்து நகரவில்லை. உன்னுடைய சக்கர ஆயுதம் (சுதர்ஸனம்), உனது பக்தனுக்கு நேர்ந்த துன்பத்தைக் கண்டு, நெருப்பு எப்படி விட்டில் பூச்சியை விழுங்குமோ அதுபோல் அந்த பூதத்தை அழித்தது. பின்னர் துர்வாஸ முனிவரை நோக்கி விரைந்தது.

7. தாவந் அசேஷ புவனேஷு பியா ஸ பச்யந்
விச்வத்ர சக்ரம் அபி தே கதவாந் விரிஞ்சம்
க: காலசக்ரம் அதிலங்கயதி இதி அபாஸ்த:
சர்வம் யயௌ ஸ ச பவந்தம் அவந்ததைவ

பொருள்: குருவாயூரப்பனே! உனது சக்கரத்திற்குப் பயந்து அனைத்து உலகங்களுக்கும் துர்வாஸர் ஓடினார். தான் சென்ற இடங்களில் எல்லாம் உனது ஆயுதத்தைக் கண்டார். ப்ரும்மாவிடம் சென்றார். ப்ரும்மாவோ, காலமாகிய சக்கரத்தை யாரால் அடக்க இயலும்? என்று கூறிவிட்டான். சிவனை சென்று அடைந்தார். அவரும் கூட உன்னை வணங்கத் தொடங்கினார்.

8. பூய: பவந் நிலையம் ஏத்ய முநிம் நமந்தம்
ப்ராசே பவாந் அஹம் ரூஷே நநு பக்ததாஸ:
ஜ்ஞானம் தபச்ச விநாயந்விதமேவ மாந்யம்
யாஹி அம்பரீஷ பதமேவ பஜேதி பூமந்

பொருள்: எங்கும் உள்ளவனே! குருவாயூரப்பா! துர்வாஸர் உனது இருப்பிடமான வைகுண்டத்தை அடைந்தார். உன்னை வணங்கி நின்ற துர்வாஸரிடம் நீ முனிவரே! நான் பக்தர்களின் அடிமை அல்லவோ? அறிவும் ஆராதனையும் அகங்காரமும் சிறிதும் இல்லாமல் இருந்தால் மட்டுமே மதிக்கத்தக்கது. நீ இங்கு இருந்து போய் அம்பரீஷனிடமே சரணம் அடைவாய் என்றாய்.

9. தாவத் ஸமேத்ய முனினா ஸ க்ருஹீத பாத:
ராஜா அபஸ்ருத்ய பவதஸ்த்ரம் அஸௌ அநௌஷீத்
சக்ரே கதேமுனி: அதாத் அகிலாசிஷ: அஸ்மை
த்வத் பக்திம் ஆகஸி க்ருதே அபி க்ருபாம் ச சம்ஸன்

பொருள்: குருவாயூரப்பனே! உடனே துர்வாஸர் விரைவாக ஓடி வந்து அம்பரீஷனின் கால்களைப் பிடித்தார். இத்தகைய பெருமையுடைய அம்பரீஷன் (அவனது பக்தியால் உண்டான பெருமை) உனது சக்ராயுதத்தைத் துதித்தான். அந்த ஆயுதமும் சமாதானம் ஏற்பட்டு மறைந்தது. துர்வாஸர் அம்பரீஷன் உன்னிடம்  கொண்டிருந்த பக்தியைப் புகழ்ந்தார். அவனுக்குத் தீமை செய்த போதிலும் அவன் மன்னித்துக் கருணை காண்பித்த செயலைப் புகழ்ந்தார். அவனுக்கு அனைத்து ஆசிகளையும் வழங்கினார்.

10. ராஜா ப்ரதீக்ஷ்ய முனிம் ஏகஸமாம் அநாச்வாந்
ஸம்போஜ்ய ஸாது தம்ருஷிம் விஸ்ருஜன் ப்ரஸன்னம்
புக்த்வா ஸ்வயம் த்வயி தத: அபி த்ருடம் ரத: அபூத்
ஸாயுஜ்யம் ச ஸ மாம் பவநேச பாயா:

பொருள்: குருவாயூரப்பனே! அம்பரீஷன் துர்வாஸ முனிவரை எதிர்பார்த்து ஒரு வருட காலம், எந்த விதமான ஆகாரமும் உண்ணாமல் காத்திருந்தான். அவர் வந்ததும் அவர் மகிழ்வுறும்படி அவருக்கு உணவு அளித்தான். அவர் சென்ற பிறகு அவன் பாரணை (உணவு உட்கொள்ளல்) செய்தான். உன்னிடம் முன்பு இருந்ததை விடப் பல மடங்கு அதிகமான பக்தி கொண்டான். இறுதியாக உனது இருப்பிடத்தை அடைந்தான் அல்லவா? இத்தனை மகிமை உள்ளவனே! என்னைக் காக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !