உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடி முளைக்கொட்டு திருவிழா: மீனாட்சி அம்மனுக்கு அலங்காரம்!

ஆடி முளைக்கொட்டு திருவிழா: மீனாட்சி அம்மனுக்கு அலங்காரம்!

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆடி முளைக்கொட்டு திருவிழாவை முன்னிட்டு மீனாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள்கிறார். ஆடிப்பட்டம் தேடி விதை என்ற ஆன்றோர் வாக்கின்படி ஆடியில் விதை விதைத்து நாற்று நட்டு விவசாயி பணிகளை மேற்கொள்வர். அவரவர் தங்கள் விளை நிலங்களில் அமோக விளைச்சல் வேண்டி முளைக்கட்டு வைத்து இறைவனை வழிபாடு செய்வர். மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் மீனாட்சி அம்மனுக்கு ஆடி முளைக்கொட்டு திருவிழா ஜூலை 28 வரை நடக்கிறது.

மீனாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தங்கச்சப்பரத்தில் பஞ்ச மூர்த்திகளுடன் காலை, மாலை ஆடி வீதிகளில் வலம் வந்து அருள்பாலிப்பார்.சிறப்பு அலங்காரங்கள்: ஜூலை 24ல் தங்கச்சப்பரத்தில் காலை 9 மணிக்கும், கிளி வாகனத்தில் இரவு 7 மணிக்கும் ஆடி வீதியில் அம்மன் எழுந்தருள்வார். அன்று மாலை 4.30 மணிக்கு சுந்தர மூர்த்தி நாயனார் குருபூஜை நடக்கிறது. சுந்தரமூர்த்தி நாயனார், சேரமான் பெருமாள் நாயனார் முறையே வெள்ளி யானை, குதிரை வாகனங்களில் எழுந்தருளி ஆவணி மூல வீதிகளில் திருவீதி உலா வந்த பின், மாலை 6.30 மணிக்கு பழைய திருக்கல்யாண மண்டபத்தில் திருக்கயிலாயக்காட்சி நடைபெறும். ஜூலை 25ல் தங்கச்சப்பரத்தில் காலை 9 மணிக்கும், உபய புஷ்பப்பல்லக்கில் இரவு 7 மணிக்கும் மீனாட்சி அம்மன் எழுந்தருள்வார். அன்று இரவு புஷ்ப பல்லக்கில் மீனாட்சி அம்மன் ஆடி வீதி வலம் வந்த பின், உற்சவர் சன்னதியில் அம்மன் சுவாமி மாலை மாற்றும் வைபவம் நடைபெறும். ஜூலை 27 ல் தங்கச்சப்பரத்தில் காலை 9.34 மணிக்கு மேல் காலை 9.58 மணிக்குள் சிம்ம வாகனத்தில் சட்டத்தேர் சித்திரை வீதியில் நடக்கும். புஷ்ப விமானத்தில் இரவு 7 மணிக்கு மீனாட்சி அம்மன் ஆடி வீதியில் எழுந்தருள்வார். மீனாட்சி கோயில் நாயக்கர் மண்டபத்தில் இரவு சைத்தோபசாரம் நடைபெறும். ஜூலை 28 ல் பொற்றாமரைக்குளக்கரையில் தீர்த்தவாரியுடன் ஆடி முளைக்கொட்டு விழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !