உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நீலகிரியில் ஹிரோடைய்யா திருவிழா: கோலாகலத்தில் படுகர் கிராமங்கள்!

நீலகிரியில் ஹிரோடைய்யா திருவிழா: கோலாகலத்தில் படுகர் கிராமங்கள்!

கோத்தகிரி: நீலகிரி மாவட்டத்தில் படுகரின மக்கள் வசிக்கும் கிராமங்களில்,ஹிரோடைய்யா திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுகரின மக்களின் குல தெய்வமான ஹிரோடைய்யா திருவிழா, மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களில் நேற்று நடந்தது.இந்த விழாவுக்காக, நேற்று முன்தினம் முழுவதும், அந்தந்த கிராமங்களில் உள்ள கோவிலில், பக்தர்கள் விரதம் இருந்து, நேற்று காலை, கோவிலில் இருந்து சங்கொலி எழுப்பி, கிராமத்தில் இருந்து சற்று தொலைவில் உள்ள பனகுடி எனப்படும் வனக்கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர்.ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே, நடை திறக்கப்படும் இகோவிலில், கல்லில் பிரம்பை உரசி, அதில் இருந்து வெளியேறும் தீப்பொறியை கொண்டு, நெய்தீபம் ஏற்றப்பட்டது.மேலும், முதல் கன்றுக்குட்டி ஈனும் பசுவின் பால்; வனப்பகுதியில் இருந்து சேகரித்த கொம்புதேன் ஆகியவற்றை கொண்டு, ஐயனுக்கு அபிஷேக பூஜை நடத்தப்பட்டது. ஆண்களுக்கு மட்டுமே, வனக்கோவில் வளாகத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். பெண்களுக்கு அனுமதி இல்லை. தொடர்ந்து, கிராமங்களில் உள்ள அனைவரும் கலாச்சார உடையுடன், காணிக்கை செலுத்தி வழிப்பட்டனர். பின்பு, வனக்கோவிலில் இருந்து பக்தர்கள் ஊர்வலமாக சங்கொலி எழுப்பி, கிராமத்தில் உள்ள கோவிலை அடைந்தனர். குறிப்பாக, தொதநாடு சீமையை தலைமையிடமாக கொண்ட, கடநாடு கிராம ஹிரோடைய்யா கோவிலில், சிறப்பு வழிப்பாடுகள்; பூஜைகள் நடந்தன. இதேபோல, ஒன்னதலை, கம்பட்டி, பனஹட்டி, டி. மணியட்டி மற்றும் கக்குச்சி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலும் இவ்விழா கோலாகலமாக நடந்தது.

தானியத் திருவிழா: ஹிரோடைய்யா திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, இன்று ஹரிக்கட்டுதல் என்ற தானிய விழா நடக்கிறது.கோவில் கல்துாணில், எள்தீபம் ஏற்றப்பட்டு, அருகில் உள்ள அக்கபக்க கோவிலில், வனப்பகுதியில் இருந்து சேகரித்துவரப்பட்ட, மூங்கில் தழையில், பலவகை தானியங்களை கோர்த்து, கட்டப்படுகிறது. இவ்வாறு கட்டுவதால், ஆண்டு முழுவதும் உணவுப்பஞ்சம் இருக்காது என, நம்பப்படுகிறது. இவ்விழாவின் ஒரு கட்டமாக, பொரங்காடு சீமைக்கு (கோத்தகிரி பகுதி) உட்பட்ட தாந்தநாடு தொட்டூரில், மண்டைதண்டு என்ற பாரம்பரிய விழா நடக்கிறது. இவ்விழாவில், வெளியூரில் இருந்து தாந்தநாடு தொட்டூருக்கு திருமணமாகி, முதல் ஆண் குழந்தை பெற்றெடுக்கும் பெண்கள், குழந்தைகளுடன், பழங்கால ஆபரணங்கள் அணிந்து, கலாச்சார உடையில் கோவிலை சுற்றி ஊர்வலமாக வரும் புனிதமான நிகழ்ச்சி நடக்கிறது. இத்திருவிழாவை முன்னிட்டு, படுக சமுதாய மக்கள் வசிக்கும், கிராமங்கள் விழா கோலம் பூண்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !