திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் நில ஆக்கிரமிப்புகள் ஆய்வு!
திருவொற்றியூர்: திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலுக்கு சொந்தமான இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்து, சிவனடியார் கூட்டமைப்பு ஆய்வு செய்தது. தமிழகத்தில், ஆக்கிரமிப்பில் உள்ள கோவில் நிலங்கள், கட்டடங்களை சட்டரீதியாக மீட்கும் முயற்சியில், திருத்தொண்டர் திருச்சபை மற்றும் அனைத்து சிவனடியார் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து செயல்பட்டு வருகின்றன.இந்த அமைப்பினர், இதுவரை, திருத்தணி, திருவாலங்காடு ஆகிய கோவில்களுக்கு சொந்தமான இடங்களில் ஆய்வு செய்து, திருவள்ளூர் மாவட்ட நீதிமன்றத்தில், அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.அதன் தொடர்ச்சியாக, திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் ஆக்கிரமிப்பில் உள்ள, 17.74 ஏக்கர் நிலங்களை மீட்பதற்காக, சென்னை உயர்நீதிமன்றத்தில், அனைத்து சிவனடியார் கூட்டமைப்பு சார்பில், பொதுநல வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, கோவில் நிலங்களை மீட்பதற்காக, சிறப்பு குழு ஒன்றை ஏற்படுத்தி, முதற்கட்ட ஆய்வை மேற்கொள்ள உத்தரவிட்டார். அதையடுத்து, கோவில் அறநிலைய துறை இணை ஆணையர், வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர், வருவாய் அலுவலர், நில அளவு ஆய்வாளர், பதிவு துறை ஆய்வாளர், தாசில்தார், மின்வாரிய இணை ஆணையர் ஆகியோர் முன்னிலையில் சிவனடியார்களுடன் இணைந்து, நேற்று முன்தினம், முதற்கட்ட நில ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கோவிலுக்கு சொந்தமான 21 இடங்களில், மொத்தம் 17.74 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. அவை திருவொற்றியூர் மற்றும் அதை சுற்றியுள்ள சிறு கிராமங்களில் ஆக்கிரமிப்பில் உள்ளது கண்டறியப்பட்டது. விரைவில், இதுகுறித்த அறிக்கை, சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என, கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.