உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடமதுரை கோயிலில் புதிய தேர்: ரதவீதிகளில் மின்இணைப்பு மாற்றம்

வடமதுரை கோயிலில் புதிய தேர்: ரதவீதிகளில் மின்இணைப்பு மாற்றம்

வடமதுரை:வடமதுரையில் தேரோடும் வீதிகளில் குறுக்கே செல்லும் மின் ஒயர்களை நிரந்தரமாக மாற்றியமைக்கும் பணி துவங்கியுள்ளது.வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயில் சில நூறு ஆண்டுகளை கடந்த பழமை வாய்ந்ததாகும். இங்கு ஆடி மாதத் திருவிழாவில் தேரோட்டம் நான்கு ரத வீதிகளில் நடைபெறும். தேரோட்டம் துவங்கும் முன் தேருக்கு இடையூறின்றி, நான்கு வீதிகளில் குறுக்கே செல்லும் மின் ஒயர்களை மின்வாரியத்தினர் அப்புறப்படுத்தி விடுவர். தேர் கடந்த பின்னர், அவற்றை மீண்டும் பொருத்துவர். இதனால் தேரோட்டத்தின் போது நான்கு ரத வீதிகளையொட்டிய பகுதிகள் அனைத்தும் இருளில் முழ்கி இருக்கும். தேரின் பின்வரும் ஜெனரேட்டர் மூலம் பெறும் மின்சாரத்தால் எரியும் அலங்கார விளக்குகளில் இருந்துதான் அப்பகுதியில் வெளிச்சம் இருக்கும். கடந்த திருவிழா வரை பயன்பாட்டில் இருந்த தேர் சிறிய அளவிலானது என்பதால், குறைந்தளவு சிரமத்துடன் பக்தர்கள் தேரை இழுத்து சமாளித்தனர். அதோடு, திருவிழா நேரத்தில் திருட்டு சம்பவங்களுக்கும் வாய்ப்பு தருவது போல இருந்து வந்தது.

தற்போது இக்கோயிலுக்கு புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தேர் 9.5 டன் எடையுடன் 15 அடி அகலம், 35 அடி உயரத்துடன் உள்ளது. அதிக எடை, அகலம், உயரம் கொண்டதாக புதிய இருப்பதால் இருளில் தேரோட்டம் நடத்துவது சிரமம். எனவே, தேர் வீதிகளில் குறுக்கே செல்லும் மின் ஒயர்களை நிரந்தரமாக அகற்றிவிட்டு, மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற பொதுமக்களின் எண்ணத்தை, தினமலர் நாளிதழ் வெளியிட்டது. இதனையடுத்து தேர் வீதியில் குறுக்கே செல்லும் மின்வயர்களை நிரந்தரமாக மாற்றியமைக்கும் பணியை மின்வாரியம் நேற்று துவங்கியது. இதற்காக பல இடங்களில் இருந்து புதிய மின்கம்பங்கள் வந்துள்ளன. மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கலைவேந்தன், உதவி பொறியாளர் சேவியர் கூறுகையில்,"தேரோட்டத்திற்கு முன்னதாக இப்பணியை நிறைவு செய்வோம். எதிர்காலத்தில் தேரோட்ட நாளில் மின்சப்ளை துண்டிப்பு பிரச்னை இருக்காது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !