தஞ்சை-பெயர்க்காரணம்!
காவிரியாறு பாயும் தஞ்சாவூர் மாவட்டத்தில், ஆடிப்பெருக்கு விழாவைச் சிறப்பாக கொண்டாடுவர். இந்த ஊருக்கு தஞ்சை என பெயர் வரக் காரணம் தெரியுமா?தஞ்சையைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்யப்பட்ட பகுதி சோழநாடு. இதை தண்+ செய் என பிரிப்பர். தண் என்றால் குளுமை என்றும், செய் என்றால் வயல் என்றும் பொருள்படும். தஞ்சை என்றால் குளிர்ந்த வயல்கள் நிறைந்த பகுதி. பெருகி வரும் காவிரியாற்றால் இப்பகுதி வளம் மிக்கதாகத் திகழ்ந்தது. சோழநாடு சோறுடைத்து என்னும் சிறப்பு பெற்றது. இவ்வூர் பற்றிய குறிப்புகள் திருச்சி மலைக்கோட்டை பல்லவமன்னன் சிம்ம விஷ்ணுவின்(கி.பி.555- 590) கல்வெட்டிலும், திருநாவுக்கரசர் பாடிய திருவீழிமிழலைத் திருத்தாண்டகத்திலும் உள்ளன. தஞ்சையில் பெரிய கோவில் கட்டுவதற்கு முன் தஞ்சை தளிக்குளத்தார் கோவில் என்ற சிவாலயம் இருந்தது. தற்போது தஞ்சபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த சிவனின் பெயரால் தான், இவ்வூருக்கு தஞ்சாவூர் என பெயர் வந்ததாக தல வரலாறு கூறுகிறது.