ராமகிருஷ்ண மடத்தில் குரு பூர்ணிமா விழா!
புதுார்: மதுரை ரிசர்வ்லைன் ராமகிருஷ்ண மடத்தில் குரு பூர்ணிமா விழா அதிகாலை மங்கள ஆரத்தி, வேத பாராயணத்துடன் துவங்கியது.இதையொட்டி நேற்று காலை சிறப்பு பூஜைகள், அஷ்டோத்ர பாராயணம் மற்றும் ஹோமம் நடந்தன. மடத்தின் தலைவர் கமலாத்மானந்தர் குரு தத்துவம் தலைப்பில் பேசியதாவது: உபதேசம் என்பது வேறு, அறிவுரை என்பது வேறு. குருவிடம் இருந்து பெறுவது உபதேசம். பெரியோர்களிடமிருந்து பெறுவது அறிவுரை. பரமாத்மாவுக்கும், ஜீவாத்மாவுக்கும் உள்ள தொடர்பு தான் குருவுக்கும், சீடனுக்கும் உள்ள தொடர்பு. குருவருள், திருவருள், சுயமுயற்சி ஆன்மிக வாழ்க்கைக்கு முக்கியம். குரு இல்லாத வித்தை குருட்டு வித்தை என்பர். குரு இல்லாமல் புத்தகத்தின் மூலம் பெறும் உபதேசம் பயன் தராது. கு என்ற சொல்லுக்கு அக்ஞானம் என்றும், ரு என்ற சொல்லுக்கு அக்ஞானத்தை நீக்குபவர் என்றும் பொருள். மன இருளைப் போக்குபவர் குரு ஆவார் என்றார்.