இருக்கன்குடி கோயிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு
சாத்தூர்:ஆடி மாதத்தையொட்டி இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இக்கோயிலில் ஆடி, தை கடைசி வெள்ளிக்கிழமைகளில் பெருந்திருவிழா நடைபெறும். ஆடி அம்மனுக்கு உகந்த மாதம் என்பதாலும், மாத கடைசிவெள்ளியான ஆக.,14ல் பெருந்திருவிழா நடைபெறுவதை முன்னிட்டும் நாளுக்கு நாள் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கோவில்பட்டி, தூத்துக்குடி, நாகர்கோவில், சங்கரன்கோவில், ராஜபாளையம், தென்காசி, கழுகுமலை உட்பட பல்வேறு நகரம், கிராமங்களில் பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கூட்டம் அதிகம் இருந்தது. நீண்ட வரிசையில் நின்று அவர்கள் அம்மனை தரிசித்தனர். பாதயாத்திரை பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்ய திருப்பதி கோயிலில் வசதி உள்ளதுபோல் இங்கும் செய்துதர வேண்டும் என அவர்கள் நிர்வாகத்தை வலியுறுத்தினர்.