நாளை நம் கையில்!
சாதனைகள் நிகழ்த்த நம்பிக்கையே அடிப்படை. ஆன்மிக சாதனையாயினும், எதுவாயினும் இதுவே விதி. நம்பிக்கை இல்லாமல் இருந்தால் எதையுமே செய்ய முடியாது. அதனால் தான், உங்களுக்கு கடுகளவு நம்பிக்கை இருந்தால் கூட, மலையை நகர்த்தி விடலாம் என்கின்றன அறநுõல்கள்.ஒரு செயலைச் செய்யும் போது அதன் மீது பற்று (நம்பிக்கை) வைக்க வேண்டும். பற்று இருந்தால் தான், நீங்கள் மேற்கொண்டுள்ள செயல் எளிதில் நிறைவேறி விடும். எந்தச் செயலையும் தெளிவுடன் துவங்க வேண்டும். ஆரம்பிப்பதற்கு முன்பே தெளிவற்ற நிலை இருந்தால், இதைச் செய்ய முயற்சிக்கின்றேன், பார்ப்போம், என்பீர்கள். இப்படிப்பட்ட தெளிவற்ற முடிவுகள் நம்பிக்கையின் அடிப்படையைத் தகர்த்து விடும்.எனக்கு வேண்டியது இதுவே. என்ன நடந்தாலும் சரி, அதை அடையும் வரையில் ஓயமாட்டேன். இது எனக்கு மிக முக்கியம், என்ற மனத்திண்மை இருந்தால் தான், உங்களது செயல்கள் வெற்றி பெறும்.உங்கள் நம்பிக்கையில், உண்மையான உறுதி இருக்கிறதா என்று பார்ப்பதற்கு சோதனைகள் தேடி வரும்.
கொடிக்கம்பம் அல்லது தொலைபேசி கம்பத்தை தரையில் நாட்டுவது எப்படி தெரியுமா? குழியைத் தோண்டி அதில் நட்டு, அத்துடன் விட்டுவிட்டால் போதாது. அப்படி செய்தால், அது சாய்ந்து விடும். அதை வலுப்படுத்த சுற்றிலும் கற்களைப் போட்டு, சம்மட்டியால் தட்டி நன்கு கெட்டிக்க வேண்டும். அதன்பிறகு அது அசைந்தால், மேலும் இறுக்குவதற்குரிய வழியைச் செய்ய வேண்டும். ஒரு கம்பம் அசையாமல் நிற்பதற்கே சம்மட்டியால் இத்தனை அடி வாங்குகிறது! வாழ்க்கையும் அவ்வாறே! உங்கள் செயல்கள் நிறைவேறும் வகையில், நீங்கள் சிரமங்களைச் சந்தித்தே ஆக வேண்டும்! ஒரு செயலின் மூலம், ஆண்டவன் உங்களை நிமிர்த்த முயலுகின்றான். சம்மட்டியால் தட்டினால் ஒழிய, நீங்கள் உறுதியாகவும், நேராகவும் நிற்கமாட்டீர்கள். ஆகையால், அடியைத் தாங்க அஞ்ச வேண்டாம்.உங்கள் மீது நீங்கள் முழுநம்பிக்கை வையுங்கள். அச்சத்துக்கு அருகில் கூட செல்ல வேண்டாம். எது நடக்க வேண்டுமோ, அது நடக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். சரி, நடப்பது நடக்கட்டும். நான் தைரியமாக இருக்கிறேன். அதைக் கண்டு அஞ்சுவதால் என்ன பயன்? நடப்பது நடக்கட்டும், என நினையுங்கள். செயல்பாடுகளில் கவனமாக இருங்கள். வெற்றிஉறுதி!