சத்திரப்பட்டி மாரியம்மன் கோயில் முளைப்பாரி விழா
சத்திரப்பட்டி: சத்திரப்பட்டி மாரியம்மன் கோயில் ஆடி முளைப்பாரி விழாவில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு பேண்டேஜ் நிறுவனங்கள் ஐந்து நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டன.சத்திரப்பட்டி சமுசிகாபுரம் மற்றும் அய்யனாபுரம் பகுதியில் பேண்டேஜ் நிறுவன கூலித்தொழிலாளிகள் அதிகம் வசிக்கின்றனர். ஆடி இறுதியில் சத்திரப்பட்டி புதுத் தெரு, வடக்குத் தெரு, நடுத்தெருக்களில் உள்ள கோயில்கள் மற்றும் சமுசிகாபுரம் மாரியம்மன் கோயில்களின் முன் முளைப்பாரி வளர்ப்பர். ஒரு வாரம் கழித்து அந்தந்த தெரு முளைப்பாரியுடன் பெண்கள் ஊர்வலமாக சென்று நத்தம்பட்டிமெயின் ரோடு துரைமட கிணற்றில் கரைப்பது வழக்கம். நேற்று மாலை 3 மணிக்கு சத்திரப்பட்டியில் துவங்கிய முளைப்பாரியில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு, பேண்டேஜ் நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்கள் விசைத்தறிக் கூட தொழிலாளர்களுக்கு ஐந்து நாள் விடுமுறை அளித்தன. ஏற்பாடுகளை 3 ஊர் நாட்டாண்மைகள், கமிட்டி உறுப்பினர்கள் செய்திருந்தனர். சங்கரேஸ்வரன் டி.எஸ்.பி.,தலைமையில் இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள் மற்றும் போலீசார் என 150 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.