செஞ்சி லலிதா செல்வாம்பிகை கோவிலில் ஆடிப்பூர விழா!
செஞ்சி: செல்லபிராட்டி லலிதா செல்வாம்பிகைக்கு ஆடிப்பூரத்தை முன்னிட்டு 18 ஆயிரம் வளையல்களால் அலங்காரம் செய்தனர். செஞ்சியை அடுத்த செல்லபிராட்டி லலிதா செல்வாம்பிகை கோவிலில், நேற்று முன்தினம் ஆடிப்பூர விழா நடந்தது. இதை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை அம்மனுக்கு சிறப்பு திரவிய அபிஷேகம் நடந்தது. கருவறை உட்பட கோவில் வளாகத்தை பூக்களால் அலங்காரம் செய்தனர். மாலை 5:00 மணிக்கு நூற்றுக்கணக்கான பக்தர்கள் செண்டை மேளம் முழுங்க முக்கிய வீதிகள் வழியாக அம்மனுக்கு சீர் கொண்டு வந்தனர். தொடர்ந்து 18 ஆயிரம் வளையல்களால் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்தனர். மாலை 6:00 மணிக்கு விக்னேஷ்வர பூஜையும், ஸ்ரீசாந்தா சுவாமிகளின் ஆன்மிக சொற்பொழிவும், 7:00 மணிக்கு சிறப்பு திரவிய ஹோமமும் நடந்தது. இரவு 8:30 மணிக்க ஸ்ரீசக்ர லலிதா சகஸ்ர பூஜையும், இரவு 9:00 மணிக்கு சீர் சமர்ப்பணம், மகா தீபாராதனையும் நடந்தது. இதில் அறங்காவலர் கன்னியப்பன் மற்றும் விழா குழுவினர் கலந்து கொண்டனர். பூஜைகளை ஈஸ்வர சிவன் தலைமையிலான சிவாச்சாரியார்கள் செய்தனர்.